வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் சி.ஐ.டி.யின் இன்டர்போல் பிரிவின் பொறுப்பாளரும் உள்ளடக்கம்

265 0

இன்டர் போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் தகவல் பாதுகாப்பு அதிகாரியாக (Data Protection Officer) இலங்கையில் செயற்பட்ட சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்தியட்சர் ரஞ்ஜித் வெதசிங்கவுக்கும் வெளிநாடு செல்ல தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இந் நிலையில் இலங்கையில் உள்ள இன்டர்போல் கிளையின் பொறுப்பாளராக செயற்பட்ட அவரது பணியின் தன்மையின் அடிப்படையில் அவருக்கு எதிராக அவ்வாறான  தடைகளை பிறப்பிப்பது பொருத்தமானதல்ல என பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந் நிலையில் சி.ஐ.டி.யின் 704 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணம் தொடர்பிலான தடைகள்,  தனக்கெதிராகவும் முன்வைக்கப்பட்டுள்ளமை ஊடாக தமது உரிமை மீறப்படுவதாக கூறி பொலிஸ் அத்தியட்சர் ரஞ்ஜித் வெதசிங்க மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து,  இலங்கையில் உள்ள இன்டர்போல் பொலிஸ் பிரிவின் பொறுப்பாளராகவும், சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராகவும் செயற்பட்டு வந்த பொலிஸ் அத்தியட்சர் ரஞ்ஜித் வெதசிங்க, பொலிஸ் தலைமையகத்தின் நலன்புரி பிரிவின் பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.