சிறு ஏற்றுமதி பயிர்களுக்கான நாற்றுகளை இலவசமாக வழங்குவதற்கு கமத்தொழில் அமைச்சு தீர்மானம்

249 0

சிறு ஏற்றுமதி பயிர் இலவச நாற்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி உள்ளுர் சிறு ஏற்றுமதி துறையினை முன்னேற்ற எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்த ஏற்றுமதி கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர பெலவத்த ,செவனகல சீனி தொழிற்சாலைகளின் நஷ்டத்தையும் ஈடு செய்யும் வகையில் செயற்திட்டங்களும் மேற்கொள்ளப்பட இருப்பதாக குறிப்பிட்டார்.

 

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்,

அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூர் சிறு ஏற்றுமதி பயிர்களுக்கான விவசாயத்தை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு சிறு ஏற்றுமதி பயிர்களுக்கான நாற்றுகளை இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளோம், வெளிநாடுகளில் இருந்து சிறு ஏற்றுமதி பயிர்களுக்கான இறக்குமதி தற்போது தடை செய்யப்பட்டுள்ளது, உள்ளூர் விவசாயிகளை முன்னேற்றும் வகையில் இந்த செயற்திட்டங்கள் முன்னெடுக்கப் படவுள்ளன.

கடந்த நான்கரை வருட காலத்தில் உள்ளூர் விவசாயிகள் மிளகாய் ஒரு கிலோவினை 450 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியாத நிலையில் இருந்தனர் ஆனால் இறக்குமதியை தடை செய்ததன் பொருட்டு தற்போது 750 ரூபா வரையிலும் விற்பனை விலையினை விவசாயிகள் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கின்றது.

எங்கள் எதிர்பார்ப்பு உள்ளூர்  விவசாயிகளை பலம் மிக்கவர்களாக மாற்ற வேண்டும் ,

விவசாயிகளுக்கு இலவச நாற்றுகளை பெற்று கொடுப்பதன் மூலம் ஏற்றுமதி இலாபத்தை அதிகரிக்க முடியும் அதற்காக விவசாயிகளுக்கான சலுகைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய  மேலும் பலதரப்பட்ட சலுகைகள் வழங்கப்பபட உள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.