கோத்தாவை அரசியலுக்கு கொண்டு வர முயற்சியை தொடரும் சீனா!

310 0

gotabaya-rajapaksa_7முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை அரசியலில் ஸ்திரமான இடத்திற்கு கொண்டு வருவதற்காக சீன அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் ஒன்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் செயற்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடலுக்கு எதிரில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட, தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பைசர் முஸ்தபா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோருடன் கடந்த முதலாம் திகதி நடந்த பேச்சுவார்த்தை இந்த தேவையின் அடிப்படையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டு வரும் அரசியல் நெருக்கடியை முறையாக முகாமைத்துவம் செய்து, சீனாவின் உதவியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைப்பது மற்றும் அதில் கோத்தபாய ராஜபக்சவை முன்னிலைக்கு கொண்டு வருவதும் தொடர்பாகவும் இவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தலைவராக இருந்து வரும் பாத் பைன்டர் நிறுவனம், சீனாவின் சீ.ஐ.சீ.ஐ.ஆர் நிறுவனத்துடன் உடன்படிக்கையை மேற்கொண்டு இலங்கையில் அரசியலை முகாமைத்துவம் செய்யும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளர் அல்லது பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் நடவடிக்கையில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

சீனாவின் சீ.ஐ.சீ.ஐ. ஆர் நிறுவனம் அந்நாட்டின் வெளிநாட்டு கொள்கை உருவாக்கும் விடயத்தில் மிகவும் பலமிக்க நிறுவனமாக கருத்தப்படுகிறது.அத்துடன் இந்த நிறுவனம் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் 11 பிரதான திணைக்களங்கள் சீனாவின் தேசிய கொள்கை சம்பந்தமாக மீளாய்வுகளை செய்து வருவதுடன் பரிந்துரைகளை முன்வைத்து வருகின்றன.தெற்கு மற்றும் தென்கிழக்காசிய கற்கைகளுக்கான நிறுவனம் என்ற நிறுவனத்தின் கீழ் இலங்கை தொடர்பாக அந்த நிறுவனம் ஆராய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

சீனா புலனாய்வு பிரிவுகளின் தேவைக்கு அமைய உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் சீன பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் இணை நிறுவனமாகும்.