பொலிஸார் தடுத்தாலும் அதற்கு முகங்கொடுக்கத் தயார் : இராவணா பலய

325 0

ranuvaகாலி முகத்திடலில் இருந்து ஆரம்பிக்கின்ற பாத யாத்திரையினை பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தடுத்தால் பார்ப்போம் என இராவணா பலய அமைப்பின் உறுப்பினர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நாங்கள் அங்கவீனமுற்றுள்ள இராணுவ வீரர்களின் உரிமைக்காக காலி முகத்திடல் இருந்து பாத யாத்திரையொன்றை நடாத்த உள்ளோம். கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது கொழும்பு கோட்டை பகுதியினை குண்டு வெடிப்பு இடம்பெறாமல் இந்த இராணுவத்தினரே பாதுகாத்தனர்.

இவ்வாறு இருக்கையில், அன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களே இன்று தமக்கான ஓய்வுதியத்தினை தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எங்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு பொலிஸார் நீதிமன்ற அனுமதியினை பெற்று வந்து தடுத்தாலும் அதற்கு முகம் கொடுக்க நாங்கள் தயார் எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த 6 நாட்களாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் நடத்தி வந்த போராட்டம் கடந்த வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டமாக மாறியது.

அத்துடன், குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்திப்பதற்காக உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.