யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பாக பல்கலைக்கழக சமூகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளதுடன், அவர்களது படுகொலை வழக்கிலும் பல்கலைக்கழக சமூகம் சார்பாக முன்னிலையாவதற்கும் கண்காணிப்பதற்கும் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் பல்கலைக்கழக சட்டத்தரணிகள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த எவரும் கலந்துகொள்ளவில்லை.
குறித்த வழக்கில் பல்கலைக்கழக மாணவர்கள் சார்ப்பாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பல சட்டத்தரணிகள் முன்வந்த போதிலும், இறுதியில் சில அரசியல்வாதிகள் இதில் தலையிட்டு தாம் வழக்கை முன்னெடுப்பதாக இறுதி நேரத்தில் செயற்பட்டதன் காரணமாக பல்கலைக்கழகம் சார்பாக முன்னிலையாகவிருந்த சட்டத்தரணிகள் தாமாக விலகியுள்ளனர்.
இது குறித்து பல்கலைக்கழக சமூகத்தின் தரப்பில் சிலர் கருத்துத் தெரிவிக்கையில், பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தமை எமக்குப் பாரிய இழப்பாகும். இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் மாணவர்களுக்கு நடைபெறக்கூடாது எனவும், எமது மாணவர்களின் இறப்புக்கு நீதியான விசாரணை வேண்டுமென ஆரம்பத்திலிருந்தே கூறிவருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு இன்னல்களையும் தாண்டி, இதில் அரசியல் தலையீடு எதுவும் இருக்கக்கூடாது என வெளிப்படையாகத் தெரிவித்து எமது செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் நிலையில், அதையும்மீறி சிலர் தமது அரசியல் பலத்தைக் காட்டுவதற்காக குறித்த வழக்கு விசாரணையை நடாத்துவதற்கு தனிப்பட்ட முறையில் முன்வந்துள்ளனர்.
அத்துடன் நாங்கள் ஏற்கனவே வழக்கு விசாரணைக்காக ஆக்களை நியமித்தது தொடர்பாக குறித்த அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருந்தபோதிலும், எம்முடன் தொடர்புகொள்ளாது, எமது ஏற்பாடுகளை திட்டமிட்டு நிறுத்தியுள்ளனர்.
தற்போது நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளநிலையில், அவை தொடர்பில் நாம் இனி தலையிடப்போவதில்லை. ஜனாதிபதியின் காலக்கெடு முடியும்வரை நாம் அமைதியான செயற்பாடுகளில் ஈடுபடுவோம். மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை நாம் ஓயப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.