அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் – இராணுவத் தளபதி

270 0

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பிரதான பொறுப்புடைய துறை என்ற ரீதியில்  இராணுவமானது எச் சந்தர்ப்பத்திலும் ஏற்படக் கூடிய அனைத்து சவால்களையும் அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

 

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள புதிய இராணுவ தலைமையகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

முறையான பயிற்சி மூலமே உள்ளக அல்லது வெளிப்புற அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள முடியும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேசிய பாதுகாப்புத் தேவைகளை அமுல்படுத்துவதில் இராணுவம் அதிக முன்னுரிமையை வழங்க வேண்டும்.

நாட்டில் அனைத்து மக்களினதும் பாதுக்காப்பிற்கான நிழலாக இராணுவம் செயற்பட வேண்டும். தாய் நாட்டின் பாதுகாப்புக்காகவும் எதிர்காலத்துக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். தற்போது காணப்படுகின்ற அமைதி தொடர்ந்தும் நிலைநாட்டப்பட வேண்டும்.

அனைத்து இலங்கையர்களும் இலங்கை இராணுவத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். இலங்கை இராணுவமானது ஒழுக்க விழுமியத்துடன் இயங்கும் ஒரு அமைப்பாகவும் மனிதாபிமான தேவைகளுக்கு ஆதரவு வழங்கும் ஒரு அமைப்பாகவும் அழைப்புக்கும் ஆணைக்கும் அப்பாற் சென்று சேவையாற்றும் ஒரு அமைப்பாகவும் உள்ளது.

மேலும் நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவம் பெரும் உதவிகளைச் செய்தது.

இன்றுவரை இராணுவம் சம்பாதித்துள்ள நல்ல பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், தொழில்முறை மற்றும் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்துடன் எதிர்கால நடவடிக்கைகளை தொடர்வதற்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.