வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு இரு வார காலக்கேடு!

269 0

அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை  அளிப்பதாக உறுதியளித்திருந்த நிலையில் ,இது வரையில் எத்தகைய  தீர்வும்  கிடைக்கப்பெறவில்லை. ஆகவே , இரண்டு வார  காலத்திற்குள் தகுந்த தீர்வு இன்றேல் எதிர்ப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக ஒன்றிணைந்த வேலையில்லாப்  பட்டதாரிகள் சங்கம் அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

 

கலாநிதி என். எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம் பெற்ற   ஊடகவியலாளர்  சந்திப்பின் போது  கருத்து தெரிவித்த சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் தன்னே ஞானானந்த தேரர் கூறியதாவது,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனவரி முதலாம் திகதியாகும் போது 54 ஆயிரம் வேலையில்லா  பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க     தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.

இருப்பினும் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக  தெரியவில்லை.தேர்தல் பிரசாரநடவடிக்கைகளும் இதனை  மையமாக கொண்டு இடம் பெற்றன. தாம் ஆட்சிக்கு வந்தால்  பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு சிறந்த  தீர்வினை  பெற்றுத்தருவதாக வாக்குறுதிகளை வழங்கினர்.

இந்நிலையில் புதிய வருடமும் ஆரம்பமாகியுள்ளது. இருப்பினும் வேலையில்லா பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில்  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.   பொதுஜன பெரமுனவின் மேல் மட்ட உறுப்பினர்கள் தொடக்கம்    கீழ் வரிசை உறுப்பினர்கள் வரையில் , தமக்கு ஆதரவு அளிக்கும்  பட்சத்தில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என கூறிக்கொள்கின்றனர்.  ஜனாதிபதியின்  பெயரையும் இதன் போது அவர்கள்  தேவையற்றவித்தில் பயன்படுத்துகின்றனர்.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக  கூறி  பொதுத்தேர்தல் வரையில் காலம் கடத்தும் நடவடிக்கைகளை  மேற்கொள்வதனை இனிமேலும் ஏற்றுக்கொள்ள முடுடியாது.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான  நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்படுத்தித் தர வேண்டியது  அவசியமானதாகும்.

ஆகவே ,  அதற்காக  அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்  வழங்கியுள்ளோம். இந்நிலையில் உரிய தீர்வு இன்றேல் எதிர்ப்பு நடவடிககைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம்.