கொடுப்பனவு போதாது, புலம்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

300 0

parliஉலகில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்தளவு சம்பளத்தை வழங்கும் நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்படும் அனுமதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்புகளில் அவர்கள் இதனை கூறியுள்ளனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன,

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை விட மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரம் உலகில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்படுகிறது.

தன்னுடன் தான் போகும் இடங்களுக்கு வந்தால், தனக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதுமானதல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் ராஜித கூறியுள்ளார்.

அவ்வளவு கஷ்டமானது என்றால், ஏன் அரசியலுக்கு வந்தீர்கள் என ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தன்னிடம் இருந்த ஆர்வமே அரசியலுக்கு வர காரணமாகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மற்றுமொரு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதை ஆமோதித்துள்ளார்.

இலங்கையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்களையும் வாகனங்களையும் விற்று அரசியலுக்கு வருகின்றனர். உலகில் எங்கும் இலங்கையில் போன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைவான ஊதியம் வழங்குவதில்லை.

இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு கிடைக்கும் வாகன அனுமதிப்பத்திரங்களை விற்று, தேர்தல் கடனை கட்டிவிட்டு மூச்சு விடுவதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.