ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்ததால்தான் இத்தாலியில் அடிக்கடி நிலநடுக்கம்

323 0

201611051029413730_vatican-condemns-catholic-radio-quakes-were-god-wrath-for_secvpfஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்ததால்தான் இத்தாலியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக கத்தோலிக்க வானொலி மூலம் கருத்து தெரிவித்த தொகுப்பாளருக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமைப்பீடமான வாடிகன் அரண்மனை கண்டனம் தெரிவித்துள்ளது.

இத்தாலி நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு சுமார் 300 பேர் பலியாகினர். அதைதொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் இத்தாலியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் உயிர்பலிகளை ஏற்படுத்தாவிட்டாலும், ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிந்து, ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது.

இப்படி தொடர்ந்து நிகழ்ந்துவரும் நிலநடுக்கம் தொடர்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கான வானொலியான ‘ரேடியோ மரியா’ மூலமாக கருத்து தெரிவித்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர், ‘இவை எல்லாம் மனிதர்களின் பாவத்துக்கு கடவுள் அளித்துவரும் தண்டனைகள். கடந்த மே மாதம் நமது நாடு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்த பிறகு இதைப்போன்ற தண்டனைகள் அதிகரித்து வருகின்றன’ என குறிப்பிட்டார்.

இதைகேட்ட பலதரப்பினர் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்ததாக முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கான வானொலியான ‘ரேடியோ மரியா’ மூலம் இதைப்போன்ற கருத்து தெரிவித்த தொகுப்பாளருக்கும், வானொலி நிலையத்துக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமைப்பீடமான வாடிகன் அரண்மனை கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, போப் வசிக்கும் வாடிகன் அரண்மனையின் துணை செயலாளரான ஏஞ்செலோ பெக்குய், ‘இதைப்போன்ற விமர்சனங்கள் நம்பிக்கையாளர்களுக்கு (கிறிஸ்தவர்கள்) மனவலியையும், நம்பிக்கை அற்றவர்களுக்கு (கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்) ஊக்கத்தையும் அளிக்கும். சமீபகாலமாக யூதமக்களுக்கு எதிராக இதைப்போன்ற கருத்துகளை ‘ரேடியோ மரியா’ வெளியிட்டு வருவது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில், இந்த வானொலி நிர்வாகத்தினர் தங்களது குரலை (தொணியை) அடக்கிக் கொண்டு, தேவாலயத்தின் செய்தியான கருணையை மட்டும் பரப்ப முயற்சிக்க வேண்டும். மேற்படி கருத்தை வெளியிட்டவர்களை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மன்னித்தருள வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.