அமிதாப் பச்சனைப் பற்றி விசாரித்த ஹிலாரி கிளிண்டன்

339 0

201611050923183740_hillary-clinton-had-a-crush-on-amitabh-bachchan_secvpfபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனைப் பற்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் தனது தோழியிடம் விசாரித்த பரபரப்பு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இருவரும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஹிலாரி கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அமெரிக்க வெளியுறவு மந்திரியாக பதவி வகித்தார். அப்போது அவரது தனிப்பட்ட இ-மெயில் முகவரியை அரசு பணிக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு ஆதாரங்கள் அடங்கிய 33 ஆயிரம் இ-மெயில்களை அவர் நீக்கி விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.) ஏற்கனவே விசாரணை நடத்தியது. இதில் ஹிலாரி மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து விட்டது.

இந்த விவகாரம் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்து வந்தது. இந்த பிரச்சினையை தொடக்கத்திலிருந்தே எழுப்பிய குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஹிலாரி ரஷியாவுடன் பகிர்ந்து கொண்ட இ-மெயில்களால் அமெரிக்காவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக்கூறியதுடன், ஹிலாரியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பிரசாரம் செய்து வந்தார்.

இதைப்போல இந்த பிரச்சினை தொடர்பாக எப்.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என குடியரசு கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அப்படி ஒரு விசாரணை தேவையில்லை என எப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் கொமே சமீபத்தில் கூறி, இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தார். ஆனால் இந்த விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது.

அதாவது ஹிலாரியின் தனிப்பட்ட இ-மெயில்களை எப்.பி.ஐ. அமைப்பு மீண்டும் ஆய்வு செய்ய முடிவு செய்து உள்ளது. இதற்கான அனுமதியை (வாரண்டு) பெற்றுள்ள ஜேம்ஸ் கொமே, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். இதற்கிடையே இ-மெயில் விவகாரத்தை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எப்.பி.ஐ.யின் நடவடிக்கைக்கு ஜனநாயக கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த நடவடிக்கையை ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ள ஜனநாயக கட்சியினர், இந்த வழக்கில் உள்ள அனைத்து தகவல்களையும் எப்.பி.ஐ. வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஹிலாரியின் இ-மெயில் விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருப்பது, தேர்தலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. முன்னதாக இரு வேட்பாளர்களுக்கு இடையே நடத்தப்பட்ட நேரடி விவாதம் மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் ஹிலாரியின் கையே ஓங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கு தற்போது எதிர்பாராத சரிவை சந்தித்துள்ளது.

இ-மெயில் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப் போவதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவு நிறுவன இயக்குனர் ஜேம்ஸ் சமீபத்தில் அறிவித்தது ஹிலாரியின் செல்வாக்கு சரிய காரணமாக கருதப்படுகிறது.

இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்படும் நிலையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை பொதுமக்களிடம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் டிரம்பை விட ஹிலாரி ஒரு புள்ளியே கூடுதல் பெற்றிருந்தார்.

நேற்றைய (நவம்பர்-4) நிலவரப்படி, ஒரு கருத்துக் கணிப்பின் அடிப்படையில் 4 புள்ளிகளும், மற்றொரு கருத்துக் கணிப்பின் அடிப்படையில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை வகிக்கிறார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

இதற்கிடையில், ஹிலாரி மந்திரியாக பதவிவகித்தபோது அவரது நெருங்கிய தோழியாக இருந்த பாகிஸ்தானியப் பெண் ஹுமா அபைதின் என்பவரது கணவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அந்தோணி வீய்னர் என்பவருக்கு சொந்தமான லேப்டாப் மூலம் அனுப்பப்பட்ட சுமார் ஆறரை லட்சம் இமெயில் பரிமாற்றங்கள் தொடர்பாகவும் எப்.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இந்த இமெயில்களில் பலவற்றில் உள்ள விபரங்கள் வெளியே கசிந்துள்ளன. அவ்வாறு கசிந்த ஒரு தகவலை அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார்.

20-7-2011 அன்று மாலை சுமார் 7 மணியளவில் ஹிலாரிக்கும் ஹுமா அபைதினுக்கும் இடையில் நடைபெற்ற இந்த தகவல் பரிமாற்றத்தில், ‘நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தோமே அந்தப் புகழ்பெற்ற வயதான இந்திய நடிகரின் பெயர் என்ன?’ என்று ஹிலாரி கேட்கிறார். அதற்கு பதில் மெயில் அனுப்பிய ஹுமா அபைதின், ‘அமிதாப் பச்சன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தற்போது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபரின் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படமாக பதிவாகியுள்ளது.

அமிதாப் பச்சனைப் பற்றி ஹிலாரி கிளிண்டன் விசாரித்ததற்கான பின்னணி என்ன? என்பது அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பரபரப்பான விவாதப்பொருளாக மாறியுள்ளது.