கேரளத்தில் இருந்து கோழிகள், முட்டைகள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை அதிகாரி தெரிவித்தார்.கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. நோயை தடுக்க கேரள அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரளாவில் இருந்து பறவைக் காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவிவிடாமல் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நெல்லை மாவட்டம் புளியரையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு, கால்நடை மருத்துவர்கள், ஊழியர்கள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளத்தில் இருந்து வரும் வாகனங்களில் பறவைக் காய்ச்சல் தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
நேற்று புளியரையில் உள்ள முகாமை தமிழக கால்நடைத்துறை கூடுதல் இயக்குனர் சக்திவேல் ஆய்வு செய்தார். அந்த வழியாக வந்த சில கேரள வாகனங்களில் அவரும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழ்நாட்டில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரளத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பாகங்களிலும் பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக – கேரள எல்லையில் 16 இடங்களில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளத்தில் இருந்து கோழிகள், முட்டைகள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த காரணம் கொண்டும் அவற்றை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என முகாமில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவ வாய்ப்பு இல்லை. அந்தளவுக்கு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.