உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தமிழ் மாநில காங்கிரஸ் தயார் நிலையில் உள்ளது என்று ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் நடந்த கட்சி நிர்வாகி ஒருவர் இல்ல விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பங்கேற்பதில்லை என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் முறையாக நடைபெறுமா? என்ற சந்தேகமும் உள்ளது. பல இடங்களில் பணப்பட்டுவாடா முடிக்கப்பட்டு உள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் கண்டிப்போடு செயல்படும் என்று நம்புகிறேன்.
உள்ளாட்சி தேர்தலை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நடத்த வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க எங்கள் கட்சி தயார் நிலையில் உள்ளது.
பாலாற்றில் ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்டியது ஏற்புடையது அல்ல. இது கண்டிக்கத்தக்கது. அதே நேரத்தில் தமிழக பொதுப்பணித்துறை முன் எச்சரிக்கையோடு செயல்பட்டிருக்க வேண்டும். அந்த பணியை பொதுப்பணித்துறையினர் செய்ய தவறி விட்டனர்.
கட்சியின் துணை அமைப்புகளுக்கு 3 மாத காலங்களுக்கு சில பணிகள் தரப்பட்டுள்ளன. வருகிற 10-ந்தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் ஒரு கட்சி இணைகிறது. அதற்கான அறிவிப்புகள் சில தினங்களில் வெளியிடப்படும்.
இம்மாத இறுதியில் மாவட்ட தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் கொள்கை விளக்க கூட்டங்கள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படும்.
ராணிப்பேட்டையில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் பாலாற்றில் விடப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. குடிநீர் கூட குடிப்பதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
நாட்டில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாத நிலையில் மத்திய பாரதிய ஜனதா அரசு உள்ளது. வெளிநாட்டு அச்சுறுத்தல், பயங்கரவாதம் தொடர்ந்து கொண்டுள்ள வேளையில் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய செயல்களை மத்திய அரசு செய்ய வேண்டுமே தவிர மக்களுக்கு அச்ச உணர்வு தரும் பணியை செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.