முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி தஞ்சாவூரில் அதிமுக தொண்டர் ரவீந்திரன் என்பவர் தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 44 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அதிமுக அமைச்சர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் பல்வேறு பிரார்த்தனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தனது உணவை எழுதி கேட்டு உண்பதாக தகவல் வெளியானது. இதை அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே இன்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி. ரெட்டி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சையி்ல இருப்பதால் மனமுடைந்த தஞ்சாவூர் மாநகராட்சி 2வது வார்டைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ரவிச்சந்திரன் இன்று தனது உடலில் தீ வைத்துக்கொண்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சையில் தேர்தல் நடக்கும் நேரத்தில் அதிமுக தொண்டர் தீ குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஜெயலலிதா நலம் பெறவேண்டி தீக்குளித்த மூன்று அதிமுக தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர். பால்குட ஊர்வலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.