ஜனாதிபதி கோத்தாபய தனது தேர்தல் வாக்குறுதியினடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் 54ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு காலம் தாழ்த்தாது நியமனம் வழங்கவும் எப்பாகுபாடுகளின்றி பட்டதாரிகளை துரிதமாக இணைத்துக்கொள்ள வலியுறுத்தி ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் வவுனியா பட்டதாரிகள் சங்கத்தலைவர் வினோதன் வலியுறுத்தியுள்ளார்.
அவரினால் அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அசாதாரண சூழ்நிலைகளிலும் எமது கல்வியைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் சென்று எமது நான்காண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்து இன்று பல வருடங்களாகியும் எவ்விதமான தொழிவாய்ப்பு இல்லாமல் இருந்து வருவதுடன் தொழில்வாய்ப்புக் கோரி பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தோம்.
எமது பட்டதாரிகளின் தகைமைகளைக் கொண்டு தொழிலின்றி எமது அன்றாட வாழக்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாத ஒரு சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதனால் இன்று வரையிலும் பட்டதாரிகளாகிய நாம் வேலையற்று நடுத் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
தற்போதைய அரசாங்கத்தினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் வாக்குறுதிகளின்படி 54ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்படும் எந்தவிதமான பாகுபாடுகளும் இன்றி 2020 ஜனவரி மாத இறுதிக்குள் வேலையற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படும் என இவ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் ஆரம்பக்கட்டமாக சாதாரண தகமையுடைய பத்தாயிரம் வேலைவாய்ப்புக்கள் உடன் வழங்கப்படவிருப்பதாக இவ்வளவு காலமாக பட்டம் முடித்து வேலையற்று இருக்கும் எமக்கு பெரும் ஏமாற்றமே. இப்புதிய அரசாங்கத்தின் தலைவர் கோத்தாபய ராஜபச்காவின் வாக்குறுதிகளினடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 54ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளின் நியமனத்தை காலம் தாழ்த்தாமல் உடன் வழங்கவும் எந்தப் பாகுபாடுகளும் இன்றி பட்டதாரிகள் தொழில்களின் இணைத்துக்கொள்ள வலியுறுத்தியும் கலந்துரையாடல் ஒன்று ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்துடன் சேர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 29.12.2019 பிற்பகல் 2மணியளவில் வவுனியா குட்சைட் வீதியிலுள்ள ஊடக கற்கை நெறி கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாகவும் இதில் வேலையற்ற அனைத்து பட்டதாரிகளையும் கலந்துகொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.