வெள்ளைவேன் கலாசாரத்தை முன்னெடுக்கலாம் என ஒருபோதும் கருத வேண்டாம் – விக்ரமபாகு கருணாரத்ன

252 0

வெள்ளை வேன் விவகாரம் தொடர்பில் அம்பலப்படுத்திய ராஜித சேனாரத்னவை ஆபத்திற்குள்ளாக்கி, தொடர்ந்தும் வெள்ளை வேன் கலாசாரத்தை நாட்டின் முன்னெடுத்துச் செல்லலாம் என்றும், ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் உடைத்தெறிந்துவிட்டு முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்று ஒருபோதும் கருதவேண்டாம் என்றும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன எச்சரிக்கை விடுத்தார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளைக் கண்டிக்கும் நோக்கில் இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உண்மையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றதை நான் நன்கறிவேன். அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் என்னை தொலைபேசியின் ஊடாகத் தொடர்புகொண்டு பேசியுமிருந்தார். நாம் அத்தகைய கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டு வந்தோம். எனவே மஹிந்தவின் ஆட்சியில் அத்தகைய சம்பவங்கள் எவையும் நடைபெறவில்லை என்று எவராலும் மறுத்துவிட முடியாது என்றும் கூறினார்.