முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் தேடிபார்க்க வேண்டும் என்று ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறியிருக்கிறார்.
இன்று பத்தரமுல்லயில் செய்தியாளர் மாநாட்டில் அவரிடம் சேனாரத்னவை கைது செய்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் அவரை கைது செய்ய முடியாமல் இருக்கின்றதே என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது,
அவருக்கான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதை தெரிந்து கொண்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் அவர் தொடர்பில் அவதானமாக இருந்திருக்க வேண்டும்.
அவர் அப்படி எங்குதான் தலைமறைவாகியிருக்க முடியும், வெளிநாட்டிற்கு செல்ல முடியாமல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நாட்டிலிருந்து வெளியேறியிருக்க சாத்தியமில்லை. எம்மை பொறுத்தமட்டில் சேனாரத்னவை கைது செய்வது தொடர்பில் அரசாங்கமே அக்கறையின்றி உள்ளதாக தோன்றுகின்றது. முதலில் பிரதமரின் வீட்டிலே சோதனையிட்டு பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கல் நோக்கம் காரணமாகவே அரசியல் வாதிகள் கைது செய்யப்பட்டுவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டிவருகின்றது என்று தெரிவித்து திஸாநாயக்கவிடம் வினவிய போது அவர் கூறியதாவது,
அரசியல் பழிவாங்கல் என்றே கூற முடியாவிட்டாலும் , இங்கு அரசியல் தலையீடு காணப்படுக்கின்றமையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
திடீரென கைதுகள் இடம்பெறுவதைப்போல் , சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். சிலரது வழக்கு விசாரணைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் காரணம் அரசியல் தலையீடுகள்தான்.
கோத்தாபய சிறந்த தலைவரனால் தனக்கு எதிராக இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைகளை அவரது பதவி பலத்தை பயன்படுத்தி தீர்வு காணாமல் , அந்த விசாரணைகளை சட்டரீதியாக முன்னெடுத்து தீர்வை காணுமாறு அறிவிக்கலாமே என்றும் தெரிவித்தார்.