சென்னையில் இருந்துகொண்டே வழக்கில் ஆஜராகத் தயங்குகிறார் ஸ்டாலின் என கராத்தே தியாகராஜன் விமர்சித்தார். இந்நிலையில் வழக்குகளைக் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்தது கராத்தே தியாகராஜன்தான் என திமுக பதில் அளித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கடந்த 2018 ஏப்ரல் 4-ம் தேதி முழு அடைப்புப் போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தின.
இதேபோல எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடைபெற்றது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீதும், வைகோ உள்ளிட்டோர் மீதும் எழும்பூர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகள், சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா, சரத்குமார், காதர் மொய்தீன், திருநாவுக்கரசு, கராத்தே தியாகராஜன் ஆகியோருக்கு நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டிருந்தார்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திருமாவளவன் மற்றும் கராத்தே தியாகராஜன் ஆஜராகினர். ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை.
இது தொடர்பாக காரத்தே தியாகராஜன் அளித்த பேட்டி:
”அண்ணன் ஸ்டாலின், ‘அமித் ஷாவைச் சந்திப்பேன். பிரதமர் மோடியைச் சந்திப்பேன்’ என்று சொல்கிறார். ஏன் சம்மனை வாங்க யோசிக்கிறார்? சாதாரண ஒரு தொண்டன் நான் சம்மன் வாங்கி வருகிறேன். அண்ணன் ஸ்டாலின் ஏன் வர மறுக்கிறார். ஏன் அவருக்கு போலீஸ் சம்மன் அளிக்கவில்லை.
அவர் சென்னையில்தானே இருக்கிறார். இதை நீதிபதியிடமே சொன்னேன். குறித்துக்கொண்டார். திருமாவளவனுக்கு சம்மன் வரவில்லை. ஆனால், அவர் நீதிமன்றத்தில் வந்து சம்மனை வாங்கிக்கொண்டார்.
காவிரி விவகாரம் இது. ஸ்டாலின் தைரியமாக இதைச் சந்திக்க வேண்டும் அல்லவா? நீதிமன்றதுக்கே வரவில்லையே. ஆர்ப்பாட்டம் அன்று நடந்தது. அனைவரையும் கைது செய்தனர். சுமார் 3000 பேரைக் கைது செய்தனர். எங்களை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைத்தார்கள்.
ஆனால், ஸ்டாலின் உள்ளிட்ட 200 பேரை மட்டும் டவுட்டனில் ஏசி கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். எங்களுக்கு இங்கு குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. அன்று பந்த். ஒரு கடை கூட திறக்கவில்லை. ஆனால் அவரும் அவருடன் வந்தவர்களும் குளுகுளு மண்டபத்தில் வடை, பாயாசத்தோடு சாப்பிட்டார்கள்.
அண்ணன் வைகோ மீது பல விமர்சனங்கள் எங்களுக்கு உண்டு. அவர் எங்களுடன் தங்கி இருப்பார், தரையில் படுத்துக் கொள்வார். அன்றுகூட நந்தனத்தில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் நீங்கள் ஒரு சம்மனை வாங்கக்கூட தயக்கம் காட்டுகிறீர்கள்.
மத்திய அரசை எதிர்ப்பேன் என்கிறீர்கள், எந்த மத்திய அரசை பாகிஸ்தானில் உள்ள மத்திய அரசையா? அல்லது பங்களாதேஷ் மத்திய அரசாங்கமா? அல்லது கைலாசாவில் உள்ள மத்திய அரசையா? எந்த மத்திய அரசை சொல்கிறார்.
காவிரி சம்பந்தமான சம்மனை வாங்கவே இவ்வளவு யோசிக்கிறாரே? இவர் எப்படி தமிழ்நாட்டில் தலைவராக முடியும். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டிலுள்ள வெற்றிடத்தை நிரப்பப் போவது அண்ணன் ரஜினிகாந்த்தான் கட்சியை விரைவில் ஆரம்பிப்பார். 2026-ல் அவர்தான் கோட்டையில் கொடியேற்றுவார்”.
இவ்வாறு கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள திமுக தரப்பு, ”விசாரணையில் ஆஜராக ஸ்டாலினுக்கு இதுவரை சம்மன் வழங்கப்படவில்லை. அதனால் ஆஜராகவில்லை. வழக்குகளைக் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்தவர் காரத்தே தியாகராஜன்தான்” எனத் தெரிவித்துள்ளது.
கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதைப் பகிரங்கமாக ஆதரித்துப் பேசி வருகிறார்.
திமுக கூட்டணியில் இருக்காமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி பேசியதால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் ஸ்டாலினைச் சீண்டும் வகையிலும், ரஜினியை ஆதரித்தும் கராத்தே தியாகராஜன் பேட்டி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.