தமிழக அரசு தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான பணிகளை நடத்தக் கூடாது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
என்.பி.ஆர். என்று அழைக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், என்.சி.ஆர். என்று அழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக அமைச்சரவையில் எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதா குறித்த விவாதத்தில் பேசும் போது, “குடியுரிமை திருத்த சட்டத்தைத் தொடர்ந்து தேசிய குடியுரிமை பதிவேடு திட்டம் அமுல்படுத்தப்படும்” என்று அமித்ஷா குறிப்பிட்டிருந்தார்.
அமித்ஷா உள்துறை அமைச்சராகப் பொறுப்பெற்ற பிறகு 2019 ஜூலை வெளியிட்ட அரசு (கெஜட்) அறிவிக்கையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), குடியுரிமை 2003-ல் வகுக்கப்பட்ட குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல் விதிகள் பிரிவு (3)ன் உட்பிரிவு (4)-ன் அடிப்படையில் மேம்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்தும் உள்துறை மந்திரி அமித்ஷா நாட்டு மக்களுக்கு தவறான தகவல் தந்ததற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
கேரளா மற்றும் மேற்கு வங்காள அரசுகள் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன. தமிழக அரசு தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) தொடர்பான பணிகளை நடத்தக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன.
குடிமக்கள் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் இடையில் தொடர்பு இல்லை என்பதை மத்திய அமைச்சரவை தீர்மானமாக நிறைவேற்றும் வரையிலும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.