3½ மணி நேரம் நீடித்த சூரிய கிரகணம்- நெருப்பு வளைய வடிவத்தை பொதுமக்கள் பார்த்தனர்

298 0

தமிழ்நாட்டில் இன்று காலை 8.06 மணிக்கு தெரிய தொடங்கிய சூரிய கிரகணம் பகல் 11.20 மணி வரை 3½ மணி நேரம் தெரிந்தது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின் அழகை ரசித்து பார்த்தனர்.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணமாகும்.

அதாவது சூரியனை சந்திரன் தனது நிழலால் பூமி மீது படாதவாறு மறைத்து விடுவதையே சூரிய கிரகணம் என்று குறிப்பிடுகிறோம். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பவுர்ணமி அன்றும் நிகழும்.

சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்து விட்டால் அது முழு சூரிய கிரகணம் ஆகும். சந்திரனால் ஒரு பகுதி சூரியனை மட்டுமே மறைக்க முடிந்தால் அது பகுதி சூரிய கிரகணம் ஆகும். சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து சூரியன் நெருப்பு வளையமாக நமக்கு காட்சி அளித்தால் அது நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஆகும்.

வானில் அரிதாக நிகழும் இந்த அற்புத நிகழ்வு 32 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) நடந்தது. சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. இதன் காரணமாக சில சமயம் பூமிக்கு அருகிலும், சில சமயம் பூமிக்கு தொலைவிலும் சந்திரன் வந்து செல்லும்.

பூமிக்கு அருகில் சந்திரன் சுற்றிவரும்போது ஏற்படும் கிரகணம் முழு சூரிய கிரகணமாக இருக்கும். அதே சமயத்தில் பூமியில் இருந்து நீண்ட தொலைவில் சந்திரன் இருக்கும்போது ஏற்படும் கிரகணம் நெருப்பு வளைய சூரிய கிரகணமாக மாறிவிடும்.

சந்திரனின் நிழல் சூரியனுக்குள்ளேயே இருக்கும். இதனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாமல் நெருப்பு வளையம் உண்டாகும். இந்த அற்புத நிகழ்வு இன்று நடந்தது.

முதலில் சவுதி அரேபியாவில் உள்ள ராயத்தில் இந்த கிரகணம் தெரியத் தொடங்கியது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த கிரகணத்தை முழுமையாக பார்க்க முடிந்தது. வட மாநிலங்களில் இந்த சூரிய கிரகணம் ஓரளவுதான் தெரிந்தது.

சூரியகிரகணம் ஒவ்வொரு பகுதியிலும் ஊதா, மஞ்சள், சிவப்பு என ஒவ்வொரு நிறத்தில் காட்சி அளித்தது. இத்தகைய நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் இன்று காலை 8.08 மணி அளவில் தொடங்கியது.

தமிழ்நாட்டில் முதன் முதலில் ஊட்டியில் சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது. இதைத்தொடர்ந்து மதுரை, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது.
நெருப்பு வளைய சூரிய கிரகணம்.

9.31 மணிக்கு நெருப்பு வளைய சூரிய கிரகணம் தொடங்கியது. 9.34 மணி வரை இந்த காட்சியை பொதுமக்கள் கண்டு களித்தனர். சுமார் மூன்று நிமிடங்களுக்கு சூரியன் நெருப்பு வளையமாக காட்சி அளித்து கண்களுக்கு விருந்து படைத்தது.

நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தனர். இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு கண்ணாடி மூலம் மட்டுமே நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர்.

பொதுமக்களுக்காக லட்சக்கணக்கான சிறப்பு கண்ணாடிகள் வினியோகிக்கப்பட்டன. அந்த கண்ணாடியை அணிந்து இன்று தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின் அழகை ரசித்து பார்த்தனர். தமிழ்நாடு முழுவதும் இந்த சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

சென்னை உள்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அறிவியல் அரங்குகளில் சூரிய கிரகணத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பள்ளி, கல்லூரிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

சென்னையில் சூரிய கிரகணம் காலை 8.06 மணி அளவில் தொடங்கியது. சூரியனை மெல்ல மெல்ல சந்திரன் மறைத்துக் கொண்டே வருவதை காண முடிந்தது.

பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கிரகணம் குறித்து மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். மெரினா கடற்கரையிலும் ஏராளமான சிறுவர்-சிறுமிகள் திரண்டு இருந்தனர். அவர்கள் விசே‌ஷ கண்ணாடி அணிந்து சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்தனர்.

கோவை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் அங்கு சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை. இதனால் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல ஈரோடு உள்ளிட்ட சில இடங்களில் சூரிய கிரகணம் முழுமையாக தெரியவில்லை.

தொடர்ந்து காலை 9.27 மணியில் இருந்து 2 நிமிட நேரத்துக்கு வளைய சூரியன் மறைப்பு நிகழ்ந்தது. நெல்லையில் 85 சதவீதம் சூரிய கிரகண நிகழ்வை காண முடிந்தது. இதற்காக மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அங்கு திரண்டு இருந்த மாணவ- மாணவிகள், பொதுமக்கள் சூரிய கண்ணாடியை அணிந்து நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

சேலத்தில் சரியாக காலை 8.08 மணிக்கு கிரகணம் தொடங்கியது. 9.35 மணிக்கு சூரியனை சந்திரன் மறைத்தது. அப்போது சூரியனை சுற்றியுள்ள பகுதி நெருப்பு வளையம் போல காட்சி அளித்தது.

கிரகணத்தை காண அறிவியல் இயக்கம் சார்பில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு சிறப்பு கண்ணாடி வழங்கப்பட்டது. பொதுமக்கள் அந்த கண்ணாடியை அணிந்து அரிய நிகழ்வான சூரிய கிரகணத்தை பார்த்தனர்.

தமிழ்நாட்டில் இன்று காலை 8.06 மணிக்கு தெரிய தொடங்கிய சூரிய கிரகணம் பகல் 11.20 மணி வரை 3½ மணி நேரம் தெரிந்தது. 11.20 மணிக்கு பிறகு சூரிய கிரகணம் மெல்ல மெல்ல விலகியது. பெங்களூரிலும் 90 சதவீதம் சூரிய கிரகணம் காணப்பட்டது. மும்பை பகுதி மக்கள் 79 சதவீத சூரிய கிரகணத்தை பார்த்தனர்.

டெல்லியில் 45 சதவீதம் அளவுக்கே சூரிய கிரகணம் தெரியும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் கடுமையான மேகமூட்டம் காரணமாக டெல்லி மக்களால் சூரிய கிரகணத்தை பார்க்க இயலவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் 8.39 மணி முதல் 11.45 மணி வரை பகுதி அளவு சூரிய கிரகணத்தை மக்களால் பார்க்க முடிந்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் வானில் தோன்றிய வளைய சூரியன்.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோவில்களில் நடைதிறப்பு, பூஜை நேரங்கள் மாற்றப்பட்டு இருந்தன. சபரிமலை, திருப்பதி, திருச்செந்தூர், பழனி உள்பட முக்கிய ஆலயங்களில் இன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை நடை திறக்கப்படவில்லை. பரிகார பூஜைகள் செய்த பிறகு இன்று மாலை கோவில் நடைகள் திறக்கப்பட உள்ளன.

திருவண்ணாமலை, காளஹஸ்தி, திருநள்ளாறு உள்பட சில ஆலயங்களில் இன்று நடை மூடப்படவில்லை. இந்த ஆலயங்களில் சூரிய கிரகணத்தை கண்டுகொள்ளாமல் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.

தமிழ்நாட்டின் மொத்தத்தில் 90 சதவீதம் அளவுக்கு சூரிய கிரகணம் தெரிந்துள்ளது. திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இன்று காலையில் இருந்தே சாரல் மழை பெய்ததால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

10 மாவட்டங்களில் மட்டுமே 90 சதவீத நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை முழுமையாக காணமுடிந்தது. நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே 100 சதவீத நெருப்பு வளையம் தெள்ளத்தெளிவாக இருந்தது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பகுதி சூரிய கிரகணத்தையே பார்க்க முடிந்தது.

இதேபோன்று முழுமையான சூரிய கிரகணத்தை 2031-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி தான் பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சூரிய கிரகணம் 2020 ஜூன் 21-ந்தேதி ஏற்பட உள்ளது. இந்த சூரிய கிரகணத்தை ராஜஸ்தான், உத்தரகாண்ட், அரியானாவில் பார்க்க முடியும். தமிழகத்தில் அந்த சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க இயலாது.