கிறிஸ்துமஸ் தினத்தன்று மத்திய பிலிப்பைன்ஸை தாக்கிய பான்போன் சூறாவளியால் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 16 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஒரு மணி நேரத்திற்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய பான்போன் சூறாவளி பிலிப்பைன்ஸின் போன்பே, கொரோன் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய தொலைதூர கிராமங்கள், பிரபலமான சுற்றுலாத்தலங்கள் மற்றும் கரையோர பகுதிகளை தாக்கியுள்ளது.
இதன் காரணமாக பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில் இணையம் மற்றும் மின்சாரம் துட்டிக்கப்பட்டதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சேதம் குறித்து முழுவிபரம் அறிவிக்கப்படாத நிலையில், விசயாஸில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக பிலிப்பைன்ஸின் அனர்த்த நிறுவன அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
கலிபோவில் உள்ள விமான நிலையம் பாரிய சேதத்துக்குள்ளான நிலையில், விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
குறித்தப்புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் மக்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியும் இன்னும் பலர் படகுகள் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதன் காரணமாக தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமலும் அவதியுற்றுள்ளனர்.
இதே போன்று 2013 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளியால் 7,300 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.