உலக மார்பு புற்றுநோய் மாதத்தை சிறப்பிக்கும் விசேட விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
உலக மார்பு புற்றுநோய் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு புற்றுநோய் சங்கம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்வொன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு புற்றுநோய் சங்க தலைவர் தர்மரட்ணம் தலைமையில், ஆசிரியர் கலாசாலை பயிலுனர் ஆசிரியர்களுக்கான மார்பு புற்றுநோய் தொடர்பான குறித்த விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில், மார்பு புற்றுநோய் தொடர்பான தெளிவான விடயங்களை சமூகத்திற்கு செல்ல வேண்டும் என்பது தொடர்பிலும், மார்பு புற்றுநோய் உள்ள நோயாளிகளை இனங்கண்டு நோயை குணப்படுத்துவதோடு உயிர் ஆபத்தில் இருந்து பாதுகாப்பது தொடர்பிலும், இலகுவான முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான இலகு வழிமுறைகள் தொடர்பாகவும் தெளிவூட்டல்களும் இடம்பெற்றன.
இக்கருத்தரங்கில் வளவாளர்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை பிரிவு அதிவிசேட வைத்திய நிபுணர் வைத்தியர் எ.இக்பால் கலந்துகொண்டு விரிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு புற்றுநோய் சங்க உறுப்பினர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபர், ஆசிரியர்கள், கலாசாலையில் பயிற்சி பெரும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.