மட்டக்களப்பு கொடுவாமடு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் முதலமைச்சரிடம் கையளிப்பு(காணொளி)

652 0

batti-cmமட்டக்களப்பு ஏறாவூர் பற்று கொடுவாமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையம் உத்தியோக பூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகர் ரங் லாய் மார்கூ மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரால் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டிடம் கையளிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 2012- 2017ஆகிய 5 ஆண்டு அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய திண்மக்கழிவு முகாமைத்துவத்திட்டத்தினை உருவாக்கும் வகையில் இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் யுனொப்ஸ் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு 275 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன.
இத்திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டத்தில் உள்ளுராட்சி சபைகளின் திண்மக்கழிவுகளை முகாமைத்துவம் செய்து பசளை தயாரித்தல் மற்றும் வேறு உற்பத்திகளுக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், யுனொப்ஸ் நிறுவனத்தின் திட்டத்தின் மூலம் திண்மக்கழிவுகளில் இருந்து பசளை தயாரித்தல் தொழில்நுட்பங்கள், நிலைபேறான பசளைத் தயாரித்தலின் வியாபாரத் திட்டமிடல்கள், வெற்றிகரமான திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டங்களின் அனுபவப்பகிர்வுகள், ஆய்வுகளின் முடிவுகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பயன்படுத்துதல், நிறுவன ரீதியான திட்டமிடலும் திண்மக் கழிவுகளால் பசளை தயாரிக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளின் திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் ஏற்படும் பிரச்சினைகளைச் சீர் செய்யும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திண்மக்கழிவுகள் மூலம் பசளை தயாரிக்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கொடுவாமடுவுக்கு மேலதிகமாக இதற்கான நிலையங்களாக களுதாவளை, ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு, ஓட்டமாவடி, ஆகிய இடங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.