மன்னார் கடற்பரப்பில் மட்டும் மீனவர்கள் சோதனை செய்யப்படவில்லை-அக்ரம் அலவி

365 0

akram-alaviஇலங்கையின் ஏனைய பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற சோதனை நடவடிக்கையை போன்றே மன்னார் – பள்ளிமுனை பகுதியிலும் இன்று சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

மன்னார் – பள்ளிமுனை பகுதியில் மீனவர்களுக்கும், கடற்படையினருக்கும் இன்று காலை ஏற்பட்ட முறுகல் நிலை குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சினால் விடுக்கப்படுகின்ற ஆலோசனைகளுக்கு அமையவே தாம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

அனுமதிப் பத்திரமின்றி மீனவர்களை கடலுக்கு அனுப்ப வேண்டாம் என கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு அமையவே தாம் இவ்வாறான சோதனை நடவடிக்கைகளை நாடு பூராகவும் முன்னெடுத்து வருவதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கேரளா கஞ்சா பரிமாற்று நடவடிக்கை, ஹெரோயின் பரிமாற்று நடவடிக்கை மற்றும், தடை செய்யப்பட்ட டைனமைட் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை போன்ற செயற்படுகளை கட்டுப்படுத்தும் வகையிலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.