பௌத்த மதகுருக்களை அரசியலில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் – மல்வத்து பீடம்

188 0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பௌத்த மதகுருக்கள் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்கக் கூடாது என மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்துவதன் மூலமும் தங்கள் பொறுப்புகளை முறையாகச் செய்வதன் மூலமும் பௌத்த மதகுருக்கள் நாட்டுக்கும் தேசத்திற்கும் மதத்திற்கும் ஒரு சிறந்த சேவையை வழங்க முடியும்.

எமது மதகுருக்கள் அரசியல் காரணமாக மனக்கிளர்ச்சியுடன் செயற்படுகிறார்கள். உலகெங்கிலும் உள்ள பௌத்த மதகுருக்களின் மரியாதையும் புகழும் பாதிப்படையத் தொடங்கியுள்ளது. எனவே, மதகுருக்களை அரசியலில் சேர்த்துக்கொள்ள வேண்டாம்.

பௌத்த மதகுருக்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற முடிவை எடுக்க வேண்டும். பௌத்த மதகுருக்கள் நாட்டின் தலைவர்களுக்கு சரியான பாதையை காட்ட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.