ராஜிதவின் 2 ஆவது முன்பிணை மனுவிற்கான சத்தியக் கடதாசி தாக்கல்

199 0
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றின் 2 ஆவது முன்பிணை மனுவிற்கான சத்தியக் கடதாசியை இன்று தாக்கல் செய்துள்ளார்.

இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பிணை மனு ஒன்றை கடந்த 19 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் முன் பிணை மனு கொழும்பு பிரதான நீதவானால் நிராகரிக்கப்பட்டது.

குறித்த மனு கடந்த 20 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த முன் பிணை மனுவின் ஊடாக மனுதாரர் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்படவுள்ள குற்றம் தொடர்பில் துல்லியமாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்படாமையினால் குறித்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றத்திற்கு முடியாது என குறிப்பிட்டு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இந்த மனுவின் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை வெளியிடுவதையும் நிராகரித்து தனது தீர்ப்பினை அறிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதற்காக பொலிஸார் தயாராகி வருவதாகவும் குறித்த மனுவில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் முன் பிணை கோரி மனு ஒன்றை கடந்த 20 ஆம் திகதி மாலையில் தாக்கல் செய்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட 2 ஆவது முன் பிணை மனு குறித்த வழக்கு விசாரணைக்காகவே அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய சந்தர்ப்பித்தில் குறித்த சத்தியக் கடதாசியை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.