வேலூர் ஜெயிலில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்

224 0

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஜெயிலில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனும், வேலூர் பெண்கள் சிறையில் உள்ள அவரது மனைவி நளினியும் சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி உண்ணாவிரதம் இருந்தனர்.

சிறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

இந்நிலையில், கடந்த 19-ந் தேதி முருகனை சந்திக்க அவரது உறவினர் ஒருவர் வேலூர் சிறைக்கு வந்தார். அப்போது அவர் கொண்டு வந்த உணவு பொருட்களை உள்ளே எடுத்து செல்ல சிறை நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முருகனை சந்தித்த உறவினர் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முருகன், உறவினர் சந்திப்பின்போது பாதியில் எழுந்து சென்றார்.

இதற்கிடையில், நேற்று காலை வேலூர் பெண்கள் சிறையில் நளினியை, முருகன் சந்தித்தபோது, சிறையில் மீண்டும் தனக்கு கொடுமை நடப்பதாக கூறி உண்ணாவிரதம் இருக்க போவதாக நளினியிடம், முருகன் கூறினார்.

சந்திப்பு முடிந்து ஆண்கள் சிறைக்கு திரும்பிய முருகன் நேற்று காலை முதல் உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தார். இன்று 2-வது நாளாக அவர் சாப்பிட மறுத்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

முருகன் கடந்த 2 மாத இடைவெளிகளில் 3-வது முறையாக உண்ணாவிரதம் இருந்து வருவது ஜெயில் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.