யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஐந்து பொலிஸாரும் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவர்கள் இருவர் சார்ப்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முத்த சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கீழான சட்டத்தரணிகள் கே.சயந்தன் மற்றும் எம்.கணேஸ் முன்னிலையாகி இருந்தனர்.
05 பொலிஸாரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரிரன்த வரலியவத்த தலைமையின் கீழியங்கும் சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த 21 ஆம் திகதி இரவு, யாழ்ப்பாண பல்கலைக்கழக 3 ஆம் வருட கலைப்பீட மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐவர், கடந்த 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.