மலையகத்தில் முடிவுறா சம்பளப்பிரச்சினை-தொடர்கிறது போராட்டங்கள்(காணொளி இணைப்பு)

490 0

akarapahana-protestedநுவரெலியா அக்கரப்பத்தன தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் உள்ள 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்திற்கு அரை நாள் சம்பள வீதம் வழங்கியுள்ளதாகவும், கடந்த காலங்களில் 18 கிலோவிற்கு குறைவாக கொழுந்து பறித்த போது முழு நாள் சம்பவம் வழங்கியதாகவும், கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்பு குறைந்த கிலோ கொழுந்து பறிக்கும் போது முழு நாள் சம்பளம் வழங்க முடியாது எனவும் நிர்வாகம் அறிவித்ததையடுத்து இத்தோட்ட தொழிலாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்திற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வார்ப்பாட்டம் சுமார் 2 மணித்தியாலயங்கள் இடம்பெற்றது.

இதேவேளை கடந்த காலங்களில் ஒவ்வொரு நாளும் 4.30 மணியளவில் தங்களின் தொழிலை முடித்து வீடு திரும்பியதாகவும், தற்போது 5 மணி வரை கட்டாயம் தொழில் செய்ய வேண்டும் என தோட்ட நிர்வாகம் வழியுறுத்துவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட போதிலும் இதுவரை சம்மந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தமக்கு விளக்கம் கொடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் 5 மணி வரை தொழில் செய்யும்போது தமது பிள்ளைகளை பராமரிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பு நிலுவை சம்பளத்தை பெற்று தருவதாக கூறிய தொழிற்சங்க தமக்கு ஏமாற்றத்தை தந்ததாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.