தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த காலகட்டத்தில் தீர்க்காவிட்டால் எந்த காலத்திலும் தீர்க்கமுடியாத நிலையே ஏற்படும் – வி.இராதாகிருஸ்ணன்

5169 0

IMG_0222தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த காலகட்டத்தில் தீர்க்காவிட்டால் எந்த காலத்திலும் தீர்க்கமுடியாத நிலையே ஏற்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

கடந்த 30வருடகாலமாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை குறைகூறிக்கொண்டே எதனையும் பெற்றுக்கொள்ளாத நிலையே இருந்துவந்தாகவும் இனிவரும் காலங்களில் குறைகூறிக்கொண்டிருப்பதை விடுத்து அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலும் மூன்று மாடிகளைக்கொண்ட வகுப்பறை கட்டிடங்களுடனான விஞ்ஞான ஆய்வுகூடமும் ஆகியவற்றை இன்று வியாழக்கிழமை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வடகிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியில் அரசாங்கம் அக்கரையாக செயற்பட்டுவருகின்றது.இந்த ஆண்டு கல்வி அபிவிருத்திக்காக 83பில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.வரலாற்றில் கல்வி அபிவிருத்திக்காக பெருந்தொகைப்பணம் ஒதுக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

ஒரு நாட்டின் அபிவிருத்தியானது கல்வியில் தங்கியுள்ளது.அந்தவகையில் கல்வியின் அபிவிருத்தியை நோக்காக கொண்டு ஜனாதிபதியும பிரதமரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.இந்த கல்வி அபிவிருத்தியை நோக்க கொண்டு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் கல்வி அபிவிருத்திக்காக 548மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.ஏ.பி.சி.டி என பாடசாலைகள் வகுக்கப்பட்டு 708 பாடசாலைகள் இந்த நிதி மூலம் அபிவிருத்திசெய்யப்படவுள்ளது.மாகாணசபையும் மத்திய அரசாங்கமும் இணைந்து மேற்கொள்ளும் செயற்றிட்டமாகவே இது அமையும்.

கேகாலை பகுதியில் சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தமிழ் மாணவர்களுக்கு கிடைப்பத்தில்லையென இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்கள்.அதற்கு காரணம் குறித்த பகுதிகளில் தமிழ் பேசும் அதிகாரிகள் இல்லாத காரணமாகும்.

கல்வி என்னும்போது வெறுமனே மாணவமாணவிகளை மட்டும் சொல்லிவிடமுடியாது.ஆசிரியர்களை உள்வாங்கவேண்டும்.அதற்கு ஏற்ப அதிகாரிகளை உள்வாங்கவேண்டும்.சில பகுதிக்கு வழங்கப்படும் நிதியொதுக்கீடுகள் கூட சரியானமுறையில் செல்லாத நிலையே இருந்துவருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமான அரசியல்கட்சியாக வடகிழக்கில் செயற்பட்டுவருகின்றது.ஐக்கிய முற்போக்கு முன்னணி மலையத்தில் பலமான அரசியல் சக்தியாக செயல்பட்டுவருகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த காலகட்டத்தில் தீர்க்காவிட்டால் எந்த காலத்திலும் தீர்க்கமுடியாது என்பதே எனது கருத்தாகும்.அரசாங்கத்தினை குறைகூறிக்கொண்டிருப்பதை விட அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கவேண்டும்.

கடந்த 30 வருடகாலமாக அரசாங்கங்களை குறைகூறிக்கொண்டே எங்களின் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.குறைகூறுவதில் இருந்து அவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் நிலைக்கு மாறவேண்டும்.தேவைப்பாட்டால் நாங்கள் ஒன்றிணைந்து செயற்படும் முயற்சியையும் மேற்கொள்வோம்.அதன்மூலம் அரசாங்கத்தினை ஆட்டிப்படைக்கும் சக்தியாக மாறவேண்டும்.

Leave a comment