ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவினால் விடுக்கப்பட்ட பிணை மனுக் கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலளார் பதவியை இராஜினாமா செய்த திஸ்ஸ அத்தநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாக பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது கையெழுத்து பொறிக்கப்பட்ட போலி ஆவணமொன்றை ஊடகங்களுக்கு முன்பாக வெளியிட்டமை உட்பட 3 குற்றச்சாட்டுக்கள் திஸ்ஸ அத்தநாயக்க மீது காணப்படுகின்றன.
இதனையடுத்து கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் பிணை மனுவினை தனது சட்டத்தரணியின் மூலமாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையில் இடம்பெற்றது.
குறித்த பிணை மனுக் கோரிக்கையில் காணப்படுகின்ற உறுதிப்பிரமாணம் பிணை வழங்கும் அளவிற்கு தகுதியுடையதல்ல என்றும், அதில் காணப்படுகின்ற சில விடயங்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் காணப்படுவதாகவும் தெரிவித்த நீதவான், பிணை மனுவிற்கான கோரிக்கையை நிராகரித்தார்.
இதனையடுத்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிவரை திஸ்ஸ அத்தநாயக்கவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.