மீனவர்களுக்கும், கடற்படையினருக்கும் இடையில் தொடரும் முறுகல்-மன்னாரில் பதற்றம்

332 0

download-1கடற்படையினரால் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமக்கு தெரிவித்ததாக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னார் பள்ளிமுனை, பனங்கட்டுக்கொட்டில், பெரியகடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று காலை மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற நிலையில், கடற்படையினர் மீன்பிடி நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் மன்னார் நகரில் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து, மன்னார் மாவட்ட நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று, மீனவர்கள் மற்றும் கடற்படையினருடன் கலந்துரையாடினர்.

ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் கடற்படையினர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதை அவதானித்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு இடையில் இடம்பெற்ற முறுகல் நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த போதிலும் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

இதன்போது  நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரிடம் கடற்படையினரின் கெடுபிடிகள் தொடர்பான முறைப்பாடுகளை மீனவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரிடமும் கேட்டறிந்த நீரியல்வள திணைக்கள அதிகாரி பீ.எஸ். மிராண்டா மீனவர்களின் தொழில் அனுமதி பத்திரத்தை பரிசீலிக்க கடற்படையினருக்கு அதிகாரம் இல்லை என கடற்படையினரிடம் நேரடியாக தெரிவித்தனர்.

இன்று காலை கடலிற்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களிடம் தொழில் அனுமதிப் பத்திரங்களை பரிசீலித்த கடற்படை என்றுமில்லாதவாறு   படகிற்குள் இருந்த அனைத்து பொருட்களுக்கும் அனுமதிப்பத்திரம் வழங்குமாறு கேட்டுள்ளனர்.

யுத்தகாலத்தில் இல்லாத பாஸ் நடமுறை தற்போது எதற்கு என மன்னார் மாவட்ட மீனவர்கள் கடற்படையினரிடம் கேள்வியெழுப்பியநிலையில், ஆத்திரமடைந்த கடற்படை மீனவர்களை மீன்பிடிக்கவிடாது தடுத்ததால் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

எனினும் தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்றா கடற்படை, இராணுவத்தினர் இவ்வாறான  செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என  மீனர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் வங்காலை, முத்தரிப்புத்துறை, நறுவிலிக்குளம் மற்றும் சிலாவத்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும்போது கடற்படையினர் தம்மை கைதுசெய்வதுடன், தமது படகுகளை பறிமுதல் செய்யவதாக அண்மையில் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.