ஐ.நா. சபையின் சட்ட வல்லுனராக இந்திய வக்கீல் தேர்வு

327 0

ஐக்கியநாடுகள் சபையின் சர்வதேச சட்ட கமிஷன் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சட்ட வல்லுனர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட ரகசிய வாக்குப்பதிவில் இந்தியாவை சேர்ந்த இளம்வயது வழக்கறிஞர் அதிகமான வாக்குகளை பெற்று, வெற்றியடைந்துள்ளார்.

ஐக்கியநாடுகள் சபையின் சார்பில் சர்வதேச சட்ட கமிஷன் தொடர்பான வழக்கு விவகாரங்களை கவனிப்பதற்காக சுழற்சி முறையில் புதிய வழக்கறிஞர்களை தேர்வு செய்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை தலைமையகத்தில் இன்று ரகசிய வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

34 உறுப்பினர்களை கொண்ட இந்த பதவிக்கு புவியியல் அமைப்பின்படி ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு முறையே ஆப்பிரிக்கா, ஆசியா-பசிபிக், கிழக்கு ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா-கரிபியன் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளை நியமிக்க நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் ஆசியா-பசிபிக் துணை கண்டத்தின் சார்பில் போட்டியிட்ட இந்திய வக்கீலான அனிருதா ராஜ்புத்(33) என்பவர் 160 வாக்குகளை வாங்கி அபார வெற்றியைப் பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக ஆசியா-பசிபிக் துணை கண்டத்தில் உள்ள நாடுகளின் சார்பில் போட்டியிட்ட ஜப்பானை சேர்ந்த வக்கீல் ஷின்யா முராசே 148 வாக்குகளையும், மூன்றாவது இடத்தில் வந்த சீன வக்கீல் ஹுய்காங் ஹுவாங் மற்றும் ஜோர்டான் வக்கீல் மஹ்மூத் டைபல்லா ஆகியோர் 146 வாக்குகளையும் பெற்றனர்.

கொரியா வக்கீல் கி கப் பார்க் 136 வாக்குகளும், கத்தார் வக்கீல் அலி பின் பெட்டாய்ஸ் அல்-மர்ரி 128 வாக்குகளையும், வியட்நாம் வக்கீல் ஹாங் தாவ் குயென் 120 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐக்கியநாடுகள் சபையின் சர்வதேச சட்ட கமிஷனின் புதிய உறுப்பினராக தேர்வாகியுள்ள இந்திய வக்கீல் அனிருதா ராஜ்புத் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக ஆஜராகி வருகிறார். மத்திய அரசின் வெளியுறவுத்துறையிலும் சட்ட ஆலோசகராக இருந்துவரும் இவர் இந்தியாவின் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வுசெய்ய மத்திய சட்ட கமிஷனால் நியமிக்கப்பட்டிருந்தார்.

சர்வதேச கடல்சார் சட்டம், சர்வதேச வர்த்தக சட்டம் தொடர்பாக பல ஆய்வு நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.