மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும்: துமிந்த நாகமுவ

282 0

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் (எம்.சி.சி) உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடுமானால் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என முன்னிலை சோஷலிச கட்சி எச்சரித்துள்ளது. 

அதேவேளை, எம்.சி.சி  உடன்படிக்கையின் பாரதூரமான விடயங்கள் தொடர்பில் பொதுமக்களை தெளிவுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஆரம்பக்கட்டமாக இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு பொதுநூலகத்தில் மாநாடொன்றை நடத்தவுள்ளதாகவும் முன்னிலை சோஷலிச கட்சியின்செயலாளர் துமிந்த நாகமுவ   தெரிவித்தார்.

மிலேனியம் சவால் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம்  முன்னெடுப்பதாக  பல்வேறு  தரப்பினரும்  குற்றச்சாட்டுக்ளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் முன்னிலை சோஷலிச கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளின் போது மிலேனியம் சவால்   உடன்படிக்கை  தொடர்பில்  பல்வேறு  கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும்  யார் வெற்றி பெற்றாலும் இந்த  உடன்படிக்கையில்  கைச்சாத்திடும் நடவடிக்கைகள் இடம் பெறும் என நாம் முன்னதாகவே கூறியிருந்தோம்.  அதேபோன்று இப்போது  அதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மிலேனியம் சலேஞ் கோப்பரேசன்,  சோபா மற்றும் எக்சா ஆகிய  உடன்படிக்கைகள்  ஒன்றுடன்  ஒன்று  தொடர்பு  பட்டவையாகும். சோபா உடன்படிக்கையின் ஊடாக அமெரிக்காவின் இராணுவத்தினர் நாட்டிற்குள் வரக்கூடிய  நிலைமை  ஏற்படும். அதேபோன்று மிலேனியம் சவால் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் பட்சத்தில் இலங்கையின்  விவசாயிகளின் நிலம் வெளிநாட்டு நிறுவனங்களின் கைக்கு போகும் ஆபத்தான நிலை ஏற்படும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்  எம்.சி.சி உடன்படிக்கை ஆபத்தானது என கூறிய  தரப்பினர். இப்போது அதில்,   நன்மை பயக்ககூடிய  அம்சங்களும்  இருப்பதாக  கூறுகின்றனர். இதனை  ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் ஊடாக சிறுகைத்தொழிலாளர்களும் விவசாயிகளும் பாதிப்புக்கு உள்ளாக  நேரிடும் . ஆகவே , இவ்விடயங்கள்  தொடர்பில்  நாட்டு மக்களுக்கு தெளிவு  படுத்தப்படவேண்டியது அவசியமானதாகும் என்றார்.