புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு நாளையுடன் ஒரு மாதம் நிறைவடையவுள்ளது. அவர் பதவிக்கு வந்தவுடன், அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் பதவி விலகுமாறு கூறியிருந்தார்.
உடனடியாகவே ஆளுநர்கள் அனைவரும் பதவி விலகி விட்டனர். அதையடுத்து, வடக்கு, கிழக்கு, வடத்திய மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
பின்னர் கிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், வடக்கு மாகாண ஆளுநர் பதவி வெறிதாகவே இருக்கிறது. அந்தப் பதவிக்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவினால் யாரும் நியமிக்கப்படவில்லை.
வடக்கு மாகாணத்துக்குப் பொருத்தமான ஆளுநர் ஒருவரைத் தெரிவு செய்வதில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறாரா அல்லது பொருத்தமான நபர் கிடைக்கவில்லையா அல்லது அந்த விடயத்தில் அக்கறையற்றிருக்கிறாரா என்ற பரவலான விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.
வடக்கில் ஆளுநர் இல்லாததால், வடக்கு மாகாணத்தின் பல நிர்வாக செயற்பாடுகள் முடங்கியுள்ளன. வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் முடிந்து விட்டது, எனவே ஆளுநரின் பொறுப்பில் தான் எல்லாமே நடக்க வேண்டும்.
வருட இறுதிக்காலம் என்பதால், வட மாகாணசபையின் கீழ் உள்ள திணைக்களங்கள், அமைச்சுக்களில் பணியாற்றும் பணியாளர்களின் நியமனங்கள், இடமாற்றங்கள், ஓய்வூதியம் என ஏகப்பட்ட பணிகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக அரச பணியாளர்களின் இடமாற்றங்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் ஆளுநர்.
வன்னிப் பகுதியில் கஷ்டப் பிரதேசங்களில் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய பெருமளவு ஆசிரியர்கள் இடமாற்றத்துக்காக ஆளுநர் செயலகத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போராட்டம் ஒன்றைக் கூட நடத்தியிருக்கிறார்கள்.
வரும் ஜனவரி 2 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும் போது, அவர்களின் இடமாற்றங்கள் உறுதியாகுமா அல்லது தொடர்ந்தும் கஷ்டப் பிரதேசங்களிலேயே இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை.
நிர்வாக ரீதியான பல பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு விரைவில் வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கோரியிருக்கிறார்.
ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் ஒன்றும் அவசரப்படுவதாகத் தெரியவில்லை. வடக்கின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என்றும், அதற்கான பரிசீலனையில் பெயர் உள்ளவர்கள் என்றும் முத்தையா முரளிதரன், முன்னாள் தலைமை நீதியரசர் சிறீபவன் என்று பல பேரின் பெயர்கள் அடிபட்டன.
இதோ நியமனம் இடம்பெறப் போகிறது, பதவியேற்கப் போகிறார் புதிய ஆளுநர் என்றெல்லாம் ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின. ஆனாலும், புதிய ஜனாதிபதி பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் வடக்கிற்கான ஆளுநரை நியமிக்க முடியவில்லை.
இந்தநிலையில் தான் வடக்கிற்கு ஒரு ஆளுநரை நியமிக்க முடியாத ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவா, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப் போகிறார் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பத் தொடங்கி விட்டனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றியோ, அதற்கான தீர்வு பற்றியோ இதுவரை வெளிப்படையாகப் பேசாத ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிடம் இருந்து தீர்வு ஒன்று கிடைக்கும் என்று தமிழ் மக்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.
அவர் காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கூட வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருப்பவர். அதனை அவர் பகிரங்கமாகவே கூறிவிட்டார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ ஒரு விடயத்தை மறுத்து விட்டால், அந்த முடிவை மீளாய்வு செய்யுமாறு அவரிடம் கோருவது வீணானது. அந்தளவுக்கு அவர் பிடிச்சிராவித்தனம் கொண்டவர்.
எனவே, 13 ஆவது திருத்தச்சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்தைக் கூட மறுத்து வரும் கோத்தாபய ராஜபக் ஷ தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவார் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்துவார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அது தான் தீர்வு என்றும் கூறியிருக்கிறார்.
அவர் கூறுகின்ற அபிவிருத்தி தீர்வை எட்டுவதற்குக் கூட, வடக்கில் சரியானதொரு நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு மாதமாகியும் வடக்கிற்கு பொருத்தமான ஒரு ஆளுநரைத் தெரிவு செய்ய முடியாத நிலையில் ஜனாதிபதி கோத்தாபய
ராஜபக் ஷ இருந்து கொண்டிருக்கிறார். இந்த விடயத்தில் அவர் பொறுமை காக்கிறாரா அல்லது பொறுப்பீனமாக இருக்கிறாரா என்ற கேள்விகள் எழுகின்றன.
வடக்கிற்கு இராணுவப் பின்னணி கொண்ட ஆளுநர்கள் நியமிக்கப்படக் கூடாது என்றும், தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் பரவலான கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த போதும், மஹிந்த
ராஜபக் ஷ அரசாங்கம் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை.
மைத்திரிபால சிறிசேனவும் கூட தனது பதவிக்காலத்தின் முடிவில் தான், வடக்கிற்கு ஒரு தமிழ் ஆளுநரை நியமித்திருந்தார். வடக்கிற்கு தமிழர் ஒருவரோ, கிழக்கிற்கு முஸ்லிம் ஒருவரோ ஆளுநராக நியமிக்கப்படமாட்டார்கள் என்ற நீண்ட கருத்தியலை உடைத்தவர் மைத்திரிபால சிறிசேன தான். வடக்கிற்கு தமிழ் ஆளுநர் ஒருவரை நியமிப்பதால் எந்தச் சிக்கலும் ஏற்படாது என்பதை, ஆளுநராக இருந்த கலாநிதி சுரேன் ராகவன் நிரூபித்திருக்கிறார்.
இந்தநிலையில் பல்வேறு தரப்புகளின் கோரிக்கைகள் அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு வடக்கு ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்கவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனாலும், எல்லாம் வெறும் ஊகங்களாக இருந்தனவேயன்றி, உண்மையாக இருக்கவில்லை. வடக்கின் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு பொருத்தமான தமிழர் ஒருவர் இன்னமும் கிடைக்கவில்லை போல என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே கூறியிருக்கிறார். பொருத்தமான தமிழர் என்பதன் அர்த்தம் ஆளுநர் பதவிக்கா அல்லது, அரசாங்கத்துடன் ஒத்துழைக்கக் கூடியவர் என்ற அர்த்தத்திலா என்ற மயக்கம் உள்ளது. ஆனாலும், இந்த விடயத்தில் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை தேடுவதை விட, தம்முடன் ஒத்துழைக்கக் கூடிய ஒருவரைத் தேடுவதில் தான் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏனென்றால், ஏற்கனவே இந்தப் பதவிக்குப் பரிசீலிக்கப்பட்ட முத்தையா முரளிதரன் போன்ற பலர், நிர்வாகத் திறமையை நிரூபித்தவர்கள் அல்ல. அவர்களின் துறைகளும், அனுபவங்களும், நிர்வாகம் சாராத வேறுபட்டவையாகவே இருந்தன.
எனவே, புதிய ஆளுநர் தெரிவில் நிர்வாகத் திறமை கருத்தில் கொள்ளப்படும் என்று கருதப்படுவதற்கில்லை.
ஆனால், தற்போதைய நிலையில், வடக்கின் ஆளுநர் நியமன விடயத்தில் நிர்வாகத் திறமை என்பது முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
ஏனென்றால், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் வரையில், ஆளுநரே மாகாண நிர்வாக இயந்திரத்தை செயற்படுத்தப் போகிறார். அவ்வாறான பொறுப்பைக் கொண்டுள்ள ஒருவர் விளையாட்டுப் பிள்ளைாயாக இருந்து விட்டுப் போக முடியாது.
அதுவும், அபிவிருத்தியின் மூலம், வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவுள்ளதாக உறுதியளித்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் இலக்கை எட்டுவதற்கு, நிர்வாக ஆளுமை கொண்ட ஆளுநர் ஒருவர் முக்கியம்.
அத்தகைய ஒரு தமிழரை அவரால் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஆச்சரியம் தான்.
அவ்வாறு ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நியாயம் கூறப்பட்டாலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால், தமிழர் அல்லாத ஒருவரை, சிங்களவர் ஒருவரை ஆளுநராக நியமிப்பதற்கும் அந்த நியாயம் உதவக் கூடும் அல்லவா?
எவ்வாறாயினும், வடக்கு ஆளுநர் நியமன விடயத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தனக்கு நெருக்கமாக செயற்படக் கூடிய ஒருவரைத் தான் தேடுவதாக கூறப்படுகிறது.
இந்த விடயத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் பேச்சுக் கூட எடுபட வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவை வடக்கில் உள்ள மக்கள் முழுமையாகவே நிராகரித்திருந்தார்கள். அதனை அவர் பதவியேற்பு உரையிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனாலும், தான் அனைத்து இலங்கையருக்குமான ஜனாதிபதி என்று குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறாயின், அனைத்துலக மாகாணங்களுக்கும் ஆளுநர்களை நியமித்தது போல, வடக்கிற்கும் விரைவாக ஒரு ஆளுநரை நியமிப்பது தானே பொருத்தமானது.
– கபில்