பனாமா ஆவணங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு நவாஸ் ஷெரீப் சுப்ரீம் கோர்ட்டில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகன்கள், மகள் மற்றும் மருமகன் வெளிநாடுகளில் நிறுவனங்கள் நடத்தி பணம் சம்பாதிப்பதற்காக பனாமா அரசின் சட்ட ஆவணம் ஊழல் குற்றச்சாட்டு வெளியிட்டது.
இதனால் பாகிஸ்தான் அரசியலில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பு ஏற்று நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
மேலும், நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி பாகிஸ்தான் தெக்ரிக் இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் இஸ்லாமாபாத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்து இருந்தார்.
இதற்கிடையே, பனாமா ஆவணம் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் நிதி மந்திரி இஷாக்தர் மீதும் சுப்ரீம் கோர்ட்டு வழக்குபதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யவும் ஆணையிட்டது.
அதை தொடர்ந்து நேற்று பிரதமர் நவாஸ் ஷெரீப் சுப்ரீம் கோர்ட்டில் தனது பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், 2013-ம் ஆண்டில் நான் எனது அனைத்து வரியையும் செலுத்திவிட்டேன். மேலும் எனது சொத்து விவரங்களையும் அறிவித்துவிட்டேன்.
எனது குழந்தைகள் யாரும் எனது உதவியை நாடி இருக்கவில்லை. தானாகவே சுயமாக சம்பாதிக்கின்றனர். நான் கடல் கடந்து எந்த நாட்டிலும் நிறுவனங்கள் நடத்தி ஆதாயம் தேடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் மற்றும் மகள் உள்ளிட்டோர் தங்களது பதில் மனுக்களை தாக்கல் செய்கின்றனர். இவற்றை பரிசீலிக்கும் சுப்ரீம் கோர்ட்டு வருகிற 7-ந் தேதி தனது முடிவை அறிவிக்கிறது.