மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மீனவர் வலையில் ஐம்பொன் நடராஜர் சிலை சிக்கியது.ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மன்னதாம்பாளையம் கிராமம் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் மீனவர்கள் நேற்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர் செல்வராஜ் வீசிய வலையில் மீன்களுடன், ஒரு சிலையும் சிக்கியது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் அந்த சிலையை வந்து பார்த்தனர். அது ஐம்பொன் நடராஜர் சிலை என தெரியவந்தது. அந்த சிலை சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் தெரிவித்தனர்.
பின்னர் மீனவர் செல்வராஜ் அந்த சிலையை வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மீனவர் வலையில் சிக்கிய நடராஜர் சிலை தொல்பொருள் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் ஆய்வு செய்து சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்று கண்டறிவார்கள். அதுவரை ஈரோடு சார்நிலை கருவூலத்தில் சிலை பாதுகாப்பாக வைக்கப்படும்’ என்றனர்.