டி.பி.எஸ்.ஜெயராஜின் டீசர் – புகழேந்தி தங்கராஜ்

492 0

dbs-jயாழ்ப்பாண மாணவர்கள் சுலக்சன் கஜன் படுகொலையை மூடிமறைக்கவும் அதை ஒரு சாலை விபத்தாகச் சித்தரிக்கவும் சிங்களக் காவல்துறை முயன்றதால்தான் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன. இன்றுவரை எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை.

அந்தக் கொலையை மூடிமறைக்க நடந்த முயற்சி அதிகாரிகளுக்கும் ஆளுநருக்கும் தெரிந்தே நடந்ததா – என்பது மிக மிக இயல்பான கேள்வி. அந்தக் கேள்விக்குக் கூட பதிலளிக்காத இலங்கை குட்டையைக் குழப்பும் வேலையை மட்டும் சத்தம் போடாமல் செய்கிறது. வழக்கம்போல அந்த வேலையை ஒரு தமிழரிடமே ஒப்படைத்திருக்கிறது. அவர் மூத்த பத்திரிகையாளர் – டி.பி.எஸ்.ஜெயராஜ். கனடாவிலிருந்தபடியே இனப்படுகொலைக் குற்றத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்ற மெனக்கெடுகிறாரே அதே ஜெயராஜ் அண்ணா.

சுலக்சன் கஜன் படுகொலை தொடர்பில் ஜெயராஜ் அண்ணா எழுதியுள்ள விரிவான கட்டுரை ஒன்றை கொழும்பு DAILY MIRROR ஆங்கில நாளேடு வெளியிட்டிருக்கிறது.

சம்பவம் நடந்தது காங்கேசன்துறை சாலை – குளப்பிட்டி சந்தியில்! அதற்கு சற்றுத்தொலைவில் தாவடியில் இன்னொரு சோதனைச் சாவடி இருக்கிறது. தாவடி சோதனைச் சாவடியிலேயே மாணவர்களின் மோட்டார் சைக்கிள் நிற்காமல் வந்ததாகவும் அதுபற்றி குளப்பிட்டி சந்தி சோதனைச் சாவடிக்குத் தகவல் தரப்பட்டதாகவும் மோட்டார் சைக்கிள் அங்கேயும் நிற்காமல் போகப் பார்த்ததால் சுட்டதாகவும் – கனடாவிலிருந்தே கேள்விப்பட்டிருக்கிறார் ஜெயராஜ் அண்ணா.

போலீசார் நிறுத்தச் சொன்னபோது நிற்பதுபோல வந்த மோட்டார் சைக்கிள் அடுத்த நொடியே வேகமெடுத்ததாகவும் போலீசார் மீதே மோதுவதுபோல மோட்டார் சைக்கிள் வந்ததால் போலீசார் சுட நேர்ந்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறதாம் ஜெ அண்ணாவுக்கு! அதைப் பெருமையுடன் தெரிவித்திருக்கிறார்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் 5 சிங்கள போலீசார் மட்டுமே! வேறு சாட்சிகள் கிடையாது. என்ன நடந்ததென்று ஜெயராஜ் அண்ணா விலாவாரியாக விவரிப்பதைப் பார்த்தால் ஸ்கைப் மூலம் சிறையிலிருக்கிற 5 போலீசாருடனும் பேசிவிட்டுத்தான் வேறு வேலை பார்த்திருப்பார் போலிருக்கிறது.

குளப்பிட்டி சம்பவம் தொடர்பில் இலங்கை போலீஸ் ஆணைக்குழு விசாரணை நடத்தியிருக்கிறது. அந்த விசாரணை முடிந்துவிட்டதாகவும் அதன் அறிக்கை வெளியாகப் போவதாகவும் தகவல். விசாரணை தொடர்பான விவரங்கள் பரமரகசியம் என்று கூறப்படுகிறது. அப்படியொரு நிலையில் என்ன நடந்ததென்று ஜெ அண்ணா விரிவாக எழுதுகிறார். இது விசாரணை நடைமுறைகளில் மூக்கை நுழைக்கிற செயல்.

நியாயமாகப் பார்த்தால் ஜெ அண்ணா மீது இலங்கை போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையில் குறுக்கிடுவதாகக் குற்றஞ்சாட்ட வேண்டும். ஆனால் இலங்கை போலீஸ் அப்படிச் செய்யப் போவதில்லை. ஏனென்றால் ஜெ அண்ணாவை இப்படியெல்லாம் எழுத வைப்பதே அவர்கள் தான்!

விசாரணை விவரங்கள் பரம ரகசியம் – என்றெல்லாம் பில்டப் கொடுத்துவிட்டு ஜெ அண்ணா மூலம் இப்படியொரு செய்தியைக் காவல்துறை கொண்டுவருவது விரிவான ஒரு சதித் திட்டத்தின் அடுத்த கட்டம்.

கண்மூடித்தனமாக வெறிபிடித்தவர்களைப் போல் துப்பாக்கியால் சுட்டிருக்கும் சிங்களக் காவலர்களைக் காப்பாற்றும் விதத்திலும் அவர்களுக்கு safe passage கொடுக்கும் விதத்திலும்தான் போலீஸ் ஆணைக்குழு அறிக்கை இருக்கப் போகிறது. அதற்கு மாணவர்களிடம் கடுமையான எதிர்ப்பு எழும். அந்த எதிர்ப்பை மழுங்கடிக்கச் செய்யும் வேலையில் ஜெ அண்ணா முன்னதாகவே இறக்கப் பட்டிருக்கிறார்.

காவல்துறை அறிக்கையை வெளியிடும்முன்பே இப்படியொரு கட்டுரையை வரவைத்து ‘இப்படித்தான் நடந்திருக்குமோ’ என்கிற எண்ணத்தை உருவாக்கிவிட்டால் அந்த மோசடி அறிக்கை வெளியாகும்போது எதிர்ப்பின் கூர்மை குறையக்கூடும். இதற்காகத்தான் ஜெ அண்ணாவைக் களத்தில் இறக்குகிறது மைத்திரி அரசு. ஜெ அண்ணாவின் கட்டுரை காவல்துறை அறிக்கையின் டீசர் அல்லது டிரெய்லர்…. அவ்வளவுதான்!

சரளமான ஆங்கிலத்துக்குள் ‘இலங்கை ஏஜென்ட்’ என்கிற தன் நிஜ உருவை மூடிமறைத்துவிட ஜெ அண்ணா என்னதான் முயன்றாலும் தன்னையே அறியாமல் சேம் சைடு கோல் போட்டுவிடுவது அவரது ஆகப்பெரிய பலவீனம். டெய்லி மிர்ரர் கட்டுரையிலும் இதைப் பார்க்க முடிகிறது.

சுலக்சனுக்கும் கஜனுக்கும் நீதிகேட்டு யாழ் பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் உறுதியாகப் போராடுகின்றனர். ‘பல்கலைக் கழகத்திலேயே மிகவும் வலுவான சங்கம் கலைப் பீடத்தின் மாணவர் சங்கம்தான்’ என்று எழுதுகிறார் ஜெ அண்ணா. அத்துடன் நின்றுவிடாமல் ‘எழுக தமிழ் பேரணிக்காக 2500 மாணவர்களைத் திரட்டிச் சென்றது அவர்கள்தான்’ என்கிறார்.

கலைப் பீடத்திலிருந்து மட்டுமே 2500 மாணவர்கள் எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டார்கள் என்பது நம்மைப் பொறுத்த வரை புதிய தகவல். ஆனால் இலங்கை அரசுக்கும் அதன் ஆளுநர் குரேவுக்கும் இது உடனடியாகத் தெரிந்திருக்கும். ‘இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை’ என்று மாணவர்களும் வலியுறுத்துவதை அவர்கள் ரசிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

ஜெ அண்ணா சொல்வதிலிருந்து எழுக தமிழ் பேரணி வெற்றிக்கு மாணவர்கள் பெருங்காரணம் என்பது விளங்குகிறது. இதனால் மாணவர்கள் மீது சிங்கள அரசுக்கும் ராணுவத்துக்கும் மட்டுமின்றி காவல்துறைக்கும் வெறுப்புணர்வு இருக்கக் கூடும். அது ஒரு இயல்பான சிங்கள மனோபாவம். இந்த எதிர்மறை மனப்போக்கு மாணவர்களைச் சுட்ட துவக்குக்குப் பின்னால் இருந்திருக்கலாம். அதை ஒரேயடியாக மறுத்துவிட முடியாது.

ஜெ அண்ணா மிக முக்கியமான இன்னொரு உண்மையையும் அம்பலப் படுத்தியிருக்கிறார்.

ஆயுதம் தாங்கிய சமூக விரோதிகள் என்று நினைத்துத்தான் போலீசார் சுட்டிருக்கிறார்கள்… அவர்கள் மாணவர்கள் என்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்…. தாங்கள் செய்த தவறுக்கு தடயமே இல்லாமல் மறைக்க முயன்றிருக்கிறார்கள்…. அதன்பிறகே ஆம்புலன்ஸை வரவழைத்திருக்கிறார்கள்……
இதெல்லாம் ஜெ அண்ணா தெரிவித்திருக்கிற தகவல்கள்.

கஜன் சுலக்சன் தொடர்பான முதல் கட்டுரையில் இதுதொடர்பாக எழுப்பிய கேள்வி ஒன்றை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்….

‘உடனடியாக சுலக்சன் கஜனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால் அவர்கள் பிழைத்திருக்கக் கூடும்….. என்ன நடந்ததென்று அவர்கள் சொல்லிவிடுவார்கள் என்கிற அச்சத்தால் அவர்கள் உயிர் பிரிகிறவரை காத்திருந்து அதன்பிறகு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்களா’ என்கிற ஐயத்தை நாம் எழுப்பினோம். நமது இந்த அச்சத்தை உறுதி செய்கிறார் ஜெ அண்ணா. மருத்துவமனைக்கு அவர்கள் தாமதமாகவே கொண்டுசெல்லப்பட்டனர் – என்கிறார்.

ஜெ அண்ணா சொல்கிறபடி துப்பாக்கிச்சூடு நடந்த நேரம் இரவு 11.45. நள்ளிரவுக்கு 15 நிமிடம் முன்பு!
நள்ளிரவுக்குப் பிறகு சுமார் அரைமணி நேரம் கழித்தே ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டிருக்கிறது.
அது 12.10 அல்லது 12.15க்கு மேலாக இருக்கலாம் என்பதைப் பூடகமாகக் குறிப்பிடுகிறார் ஜெ அண்ணா.(Police called Ambulance shortly after midnight.). ஆக ஒரு ஏஜென்டின் எழுத்தே இலங்கையைக் காட்டிக் கொடுப்பதாக மாறிவிட்டிருக்கிறது. சொந்தச் செலவிலேயே சூனியம் வைத்துக் கொள்வது என்பது இதுதான்!

துப்பாக்கியால் சுடப்பட்டபிறகு சுமார் அரைமணி நேரம் மாணவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க அதைப்பற்றிக் கவலையேபடாமல் தடயங்களை தேடித்தேடி அழித்துக் கொண்டிருந்திருக்கின்றனர் சிங்களப் போலீசார். இதெல்லாம் முள்ளிவாய்க்கால் முன்னனுபவப் பாடம்!

தடயத்தையே மறைக்க முயன்றவர்கள் மாணவர்கள் உயிர்பிழைத்து வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கு மட்டும் அனுமதித்திருக்கப் போகிறார்களா? சட்டப்படி பார்த்தால் இது கண்ணெதிரில் 2 மாணவர்கள் துடிதுடித்துக் கொண்டிருக்க அவர்கள் உயிரிழக்கும் வரை காத்திருந்து ஆம்புலன்ஸை வேண்டுமென்றே தாமதமாக வரவழைத்த குற்றம்.

முதலில் நடந்தது சாலை விபத்து என்று சாதிக்கப் பார்த்தார்கள். முடியவில்லை. நள்ளிரவில் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்ட சுற்றுவட்டார மக்கள் அந்தத் தகவலை பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தெரிவித்துவிட்டதால் அந்தச் சதி முளையிலேயே முறியடிக்கப்பட்டது.

போலீசாரின் துவக்குக்குத்தான் மாணவர்கள் இரையாகி இருக்கின்றனர் என்பது அம்பலமான பிறகு ‘நிற்காமல் போனதால்தான் போலீசார் சுட்டிருக்கின்றனர்’ என்கிற திட்டமிட்ட பித்தலாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தப் பித்தலாட்டத்தின் அடுத்தகட்டம்தான் ஜெ அண்ணாவின் இங்கிலீஷ் புளுகு. நிற்காமல் போனதால் மட்டுமே போலீசார் சுட்டுவிடவில்லை – என்பது அவரது தகவல்.

போலீசார் மீதே மோதுவது மாதிரி வந்ததால்தான் வேறு வழியில்லாமல் அவர்கள் சுட நேர்ந்திருக்கிறது – என்பது ஜெ அண்ணா கொடுக்கிற மேலதிகத் தகவல். ‘மோதுவதுமாதிரி வந்தால் போலீஸ்காரன் பார்த்துக் கொண்டிருப்பானா’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்த கூச்சநாச்சமில்லாமல் முயன்றிருக்கிறார் ஜெ அண்ணா.

தமிழ்ப் பத்திரிகையாளர்களை குவார்டர் பாட்டிலுக்கு வாங்கிவிட முடியும் – என்று சென்னையிலிருந்த இலங்கைத் துணைத் தூதர் ஒருவர் முன்பு சொன்னபோது நான் கோபப்பட்டிருக்கிறேன். ஜெ அண்ணா போன்றவர்களை மனத்தில் வைத்துக்கொண்டுதான் அந்தத் தூதர் அப்படிப் பேசியிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

சுலக்சனின் மார்பு தலை மற்றும் அடிவயிற்றில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன. பின்னால் உட்கார்ந்திருந்த கஜனின் உடலிலும் குண்டு பாய்ந்திருந்தது. அதை அறிந்த யாழ் பல்கலை மாணவர்கள் ஆவேசத்துடன் வீதிக்கு வந்தனர். அதற்குப் பிறகே இலங்கை அரசு வழிக்கு வந்தது. போலீசார் கைது செய்யப்பட்டனர். ஜெ அண்ணாவோ சுமந்திரன் எழுதிக்கொடுத்தபடியே மைத்திரியிடம் சம்பந்தர் பேசியதால்தான் விசாரணைக்கே வழிகிடைத்தது என்பதுபோல எழுதி அகமகிழ்கிறார்.

இத்துடன் முடிந்துவிடவில்லை பொய்சிலிர்க்கவைக்கும் ஜெ அண்ணாவின் ஆங்கிலப் புலமை. குளப்பிட்டி சம்பவம் தொடர்பாக நேர்மையான பக்கச் சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்று அதிபர் மைத்திரிபாலா உறுதியளித்துவிட்டாராம். மைத்திரியின் உறுதிமொழி இருண்ட மேகங்களுக்கு இடையே தெரிகிற ஒளிக்கீற்றாம்! சட்டங்களும் தர்மங்களும் செல்லரித்துப்போனதால் நாசமாகிக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தின் அதிபரை நம்பி இப்படியெல்லாம் புல்லரித்துப் போகிறார் ஜெ அண்ணா.

சர்வதேச விசாரணை தொடர்பாக ஜெனிவாவில் மைத்திரி அரசு கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று என்று ஜெ அண்ணாவுக்குத் தெரியுமா தெரியாதா?

சுலக்சன் கஜனைப் போலவே நடுவீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவை அறிவாரா ஜெ அண்ணா? இவர்களைப் போலெல்லாம் விலை போய்விடாமல் தமிழர்கள் மீதான விமானத் தாக்குதல் குறித்து மனசாட்சியோடு கேள்விகேட்ட சிங்களப் பத்திரிகையாளன் லசந்த. அதற்காக அவன் கொடுத்த விலை பெறுமதி மிக்க அவனுடைய உயிர். 2009 ஜனவரி 8ம் தேதி தலைநகர் கொழும்பிலேயே கொல்லப்பட்டான் லசந்த. கஜனும் சுலக்சனும் சுட்டுக்கொல்லப்பட்டது ஒரு பின்னிரவு நேரத்தில்! லசந்த கொல்லப்பட்டது பட்டப் பகலில்! இதுதான் வித்தியாசம்.

லசந்த படுகொலை தொடர்பில் தீவிர விசாரணை நடக்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றெல்லாம் வாய்கிழிய வாக்குறுதி கொடுத்தது மைத்திரி அரசு. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? லசந்த கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவரை மைத்திரி வெளிப்படையாகக் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே பெயிலில் விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம்.

குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடிக்கும் இந்தத் ‘தயாள’ குணத்துக்காக மைத்திரியை வாழ்த்தியிருக்கிறார் ஒரு பிரபல குற்றவாளி. அவர் திருவாளர் கோதபாய ராஜபக்ச. இதுவாவது ஜெ அண்ணாவுக்குத் தெரியுமா? மைத்திரியின் தயவால் கோதபாயவின் இருண்ட வானில் தான் ஒளிக்கீற்று தெரிகிறது – என்பது ஜெ அண்ணாவுக்குப் புரியவேயில்லையா?

முழுமையான நேர்மையான தீவிரமான விசாரணை – என்று மைத்திரி அரசு கொடுக்கும் வாக்குறுதிகளின் லட்சணம் இது. இப்படியொரு அவலட்சண அரசுக்கு வக்காலத்து வாங்கவும் இருண்ட வானம் ஒளிக்கீற்று என்றெல்லாம் புளுகிப் புளுகிப் புல்லரிக்கவும் எப்படி முடிகிறது ஜெ அண்ணாவால்!