சிங்கள இசையமைப்பாளர் பண்டித் டபிள்யூ. டி அமரதேவவின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் சனிக்கிழமை, பூரண அரச மரியாதையுடன் சுதந்திர சதுர்க்கத்தில் இடம்பெறவுள்ளது.
அத்துடன், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஒரு வார காலம், துக்கதினமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அன்னாரின் பூதவுடல் நாளை முற்பகல் 10 மணியில் இருந்து, சுதந்திர சதுர்க்கத்தின் கலாபவனத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அவரது உடலம் கொழும்பு பல்கலைக்கழத்தின் மருத்துவ பீடத்திற்கு வழங்கப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் பண்டித் அமரதேவ திடீர் சுகவீனம் காரணமாக சிறி ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிசைபெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
வன்னகுவத்த வடுகே டொன் அல்பேர்ட் பெரேரா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், 88 வயதான பழம்பெரும் இசையமைப்பாளராவார்.
இந்துஸ்தானி இசையில் தேர்ச்சிப் பெற்ற இவர், சிங்கள இசைத்துறையில் முக்கிய இசைக் கலாசாரத்தை ஏற்படுத்தியவரார்.
இவருக்கு இந்தியாவின் அதி உயர் விருதான பத்மசிறி விருது 1986ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
அத்துடன் அவர் இலங்கையின் கலாகீர்த்தி மற்றும் தேசமான்ய ஆகிய விருதுகளையும் வென்றுள்ளார்.
2001ஆம் ஆண்டு அவர் ஆசியாவின் நோபல் பரிசு என கருதப்படும் ரமோன் மெக்சைசே விருதினை வென்றார்.
மாலைத்தீவு நாட்டின் தேசிய கீதத்திற்கு இசையமைத்தவரும் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.