மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் பிடியில் இருந்த 930 ஏக்கரில் 300 ஏக்கரை கடற்படையினர் விடுவித்தபோதிலும் வன ஜீவராசித் திணைக்களத்தினர் அனுமதி மறுப்பதனால் 120 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமது விவசாயக் காணிகளை இதுவரை காலமும் கடற்படையினர் அபகரித்துவைத்திருந்தனர். படையினர் குறித்த காணிகளை ஒப்படைத்தபோதிலும் தற்போது அதனை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தர மறுக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முள்ளிக்குளம் பகுதியில் கடந்த 20 வருடங்களாக விவசாயம் செய்தே எமது வாழ வாதாரத்தினை மேற்கொண்டு வந்தோம். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட இப் பகுதிகளில் நாம் விவசாயம் மேற்கொண்டோம். இருப்பினும் யுத்த நிறைவின் பின்பு 2009ம் ஆண்டு காலப்பகுதியில் இப் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை அபகரித்து முகாம் அமைத்து நிலை கொண்டிருந்தனர். பின்னர் அவற்றில் ஆயிரம் ஏக்கரை விடுவித்திருந்தனர். அதன் பின்பும் கடற்படையினர் வசம் 930 ஏக்கர் நிலம் இருந்த்து. இவ்வாறு கடற்படையினர் வசம் கானப்பட்ட 930ஏக்கர் நிலத்தில் எமது 450 ஏக்கர் வயல் நிலங்களும் காணப்பட்டதனால் அவற்றினை விடுவிக்குமாறு பல கோரிக்கைகள் முன்வைத்தோம். இதன் பிரகாரம் அண்மையில் 300ஏக்கர் வயல் நிலப் பகுதியினை கடற்படையினர் விடுவித்தனர்.
இருப்பினும் குறித்த பகுதி தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் என வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் உரிமைகோரி எமது விவசாய நடவடிக்கைக்கு தடைபோடுகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் முசலி பிரதேச செயலாளரைத் தொடர்பு கொன்டு கேட்டபோது, கடற்படையினர் வசமிருந்த 930 ஏக்கர் நிலத்தில் கடந்த 9ம் மாதம் சுமார் 300 ஏக்கர் நிலத்தினை விடுவித்து எமக்கும் அறிவித்தனர்.
இருப்பினும் குறிப்பிட்ட பிரதேசம் தமது திணைக்களத்திற்கானதாக வர்த்தகமாணி அறிவித்தல் உண்டு என்பதன் அடிப்படையில் வன ஜீவராசித் திணைக்களத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். இருப்பினும் சுமார் 20 வருடங்களாக தாம் வயல் செய்த பிரதேசம் என்ற அடிப்படையில் அவற்றினைப் பெற்றுத்தருமாறு நூற்றிற்கும் மேற்பட்டோர் கோருகின்றனர். எனவே இது தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. எனப் பதிலளித்தார்.