கிளிநொச்சியில் சட்டவிரோத மரக்கடத்தலுக்கு உடந்தையான காவல்துறையினர் பணிநீக்கம்!

319 0

sl_police_flagகிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக சட்டவிரோத மரக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு காவல்துறையினர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டத்தின் உதவி காவல்துறை அத்தியட்சகர் றொசான் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – அக்கராயன் காட்டுப் பகுதியிலிருந்து நேற்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பதினாறு முதிரை மரக்குற்றிகளை கிளிநொச்சி நகருக்குக் கொண்டு செல்வதற்கு உடந்தையாக இருந்த இரண்டு காவல்துறையினரே பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த காவல்துறையினர் இருவர் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சட்டவிரோதமாக மரங்களை வெட்டி கடத்தியவா்கள் கைதுசெய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி காட்டுப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மரக் கடத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும், அதற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.