ஆவாக் குழு ஆரம்பிக்கப்பட்டது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தாலும், அக்குழு கோத்தபாய ராஜபக்ஷவின் ஆசீர்வாதத்துடனே ஆரம்பித்தது எனவும், அது பற்றிய தகவல்களை தான் விரைவில் அம்பலப்படுத்தப்போவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்,ஆவாக் குழு ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தாலும், அக்குழு அவரின் ஆசீர்வாதத்துடனேயே ஆரம்பிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்களை விரைவில் வெளியிடுவேன்.
ஜோசப் பரராஜசிங்கம், பிரகீத் எக்னெலிகொட, நடராஜா ரவிராஜ், லசந்த விக்கிரமதுங்க ஆகியோரின் படுகொலைகளிலிருந்து கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் தப்பமுடியாது.
இந்த விசாரணைகளின் முடிவில் இந்தக் கொலைகளைச் செய்தவர்கள் யார் என மக்கள் அறிந்துகொள்வார்கள்.
ஆவா குழு தொடர்பாக தான் கூறிய கருத்து இராணுவத்தினரை அவமதிப்பதாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இருப்பினும், இராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் நான் எத்தகவலையும் கூறவில்லை. இவ்வாறான குழுக்களை உருவாக்குவதற்காக இராணுவத்தினரை அனுப்பி அவர்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியது கோட்டாபய ராஜபக்ஷ தான் என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.