புகையிரதக் கடவை காப்பாளர்களுக்கு மாற்றீடாக சிவில் பாதுகாப்பு பிரிவினரை கடமையில் அமர்த்துவது 2638 ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் என வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின்; தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.
வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கடந்த மூன்று ஆண்டு காலமாக பொலிசாருடைய கட்டுப்பாட்டின்கீழ் ஒரு நாளைக்கு 250 ரூபா சம்பளத்துடன் மாதாந்தம் 7500 ரூபாவுக்கு எமது சேவையை செய்து வந்திருந்தோம்.
புகையிரதக் கடவைக் காப்பாளர்களாக சேவையாற்றிய எங்களுக்கு போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதுவரை எந்தவிதமான பதிலும் தரவில்லை.
புகையிரத கடவை ஊழியர்களுக்கு மாற்றீடாக சிவில் பாதுகாப்பு பிரிவினரை கடமையில் அமர்த்துவதாக தெரிவித்த கருத்துக்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்.
எமது எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எங்களை வெளியேற்றுவது அடிப்படை மனித உரிமை மீறல்.
இவ்விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்.எனவும் தெரிவித்தார்.