இரு இளைஞர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து அட்டகாசம்!

355 0

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்த இருவர் வைத்தியசாலைப் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதுடன்  தளபாடங்களையும் சேதமாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வெட்டுக்காயத்துடன் மருந்து கட்டுவதற்காக இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு வைத்திய பரிசோதனைக்கு பின் மருந்து கட்ட வைத்தியசாலை பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்த போது அவ்விளைஞர்கள் தமக்கு உடனடியாக மருந்து கட்டவில்லை என்று வைத்தியசாலை பணியாளர்களையும் தாதிய உத்தியோகத்தர்களையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியதுடன் வைத்தியசாலை தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அங்கு கடமையிலிருந்த பாதுகாப்பு பணியாளர்களையும் இரும்பு கம்பிகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு குழுமிய அப்பகுதி இளைஞர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து நையப்பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இருந்த போதும் ஒருவர் கைவிலங்கோடு பொலிஸாரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

எனினும் இளைஞர்கள் மீண்டும் குறித்த இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த இருவரும் வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதற்கு முன்னரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்து ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.