29.11.2019.
எங்கள் அன்புக்குரிய தமிழீழ மக்களே !
கண்ணீர் கோலம் வீரரே! எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே!
இதயக் கோயிலில் என்றும் குடியிருக்கும் மாவீரச் செல்வங்களின் நாளான நவம்பர் மாதம் 27 ஆம் நாளில் தமிழீழ தேசத்திலும் புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் வாழும் நாடுகளிலும் மாவீரர்நாள் மிகவும் எழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது. பௌத்த பேரினவாதத்தின் அதியுச்ச தலைவர்களாக சனாதிபதியாகவும், பிரதமராகவும், இனப்படுகொலைகளுக்குக் காரணமாகவிருந்த இராணுவ அதிகாரிகள் தலைமைப் பொறுப்பிலும் ஆட்சிபீடமேறியிருக்கும் இன்றைய தாயகச் சூழ்நிலையில், எதற்கும் துணிந்து எதிர்கொண்டும் தங்கள் பிள்ளைகளின், சகோதர்களின், உறவுகளின் சகதோழர்களின், நண்பர்களின் உயிர்க் கொடைக்கான வரலாற்றுக் கடமையை எம் தேசமக்கள் கொட்டும் மழையிலும் வெளிக்காட்டியிருந்தனர்.
பிரான்சிலும் பல்வேறு நகரங்களில் வாழும் தமிழ் மக்கள் தமிழீழ மாவீரர்நாளில் மாவீரச் செல்வங்களுக்குத் தமது கடமையை செய்திருந்தனர். பாரிசிலும் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்விலும் கொட்டும் பனிக்கட்டி மழைக்கு மத்தியிலும் எமது மக்கள் தமது பிள்ளைகள், குழந்தைகளுடன் வந்து மாவீரர்களுக்கான வணக்கத்தைச் செலுத்தியிருந்தனர். இந்த உயர் வணக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் எமது அனைத்து உப கட்டமைப்புகளும் பல மாதங்களுக்கு முன்பிருந்தே தமது பணிகளை அர்ப்பணிப்புடன் ஆற்றியிருந்தன.
இந்த உரிமை மிகு வணக்க நிகழ்வுக்கு பாரிசு வர்த்தக நிலையங்களும் தமது பங்களிப்பைப் பல வழிகளில் வழங்கியிருந்தனர். இந்த நேரத்தில் எமது நன்றிகளையும் அவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின் றோ ம். எங்கள் மக்களின் தேசப்பற்றையும், இனவிடுதலையையும் சமத்துவம், சகோதரத்துவம்,சுதந்திரம் என்ற உயரிய கோட்பாட்டைக் கொண்ட பிரெஞ்சு தேச மக்களுக்கும், ஏனைய பல்லின மக்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் மஞ்சள், சிவப்பு எழுச்சி நிறங்கள் கொண்ட கொடிகளை வர்த்தக நிலையங்களில் வர்த்தகர்களின் அனுமதியுடனும் விருப்பத்துடனும் கடந்த காலத்தில் கட்டப்பட்டு வந்திருந்தது. இச் செயற்பாடானது ஆண்டுக்கு இரண்டு தடவைகள் தமிழினப் படுகொலைக்குள்ளான நாளான மே 18 ஆம் நாளிலும், மாவீரர்நாள் நவம்பர் 27 இலிலும் மக்களால் செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு உணர்வுகள் மேலிட்ட மே 18 இன் 10 ஆம் ஆண்டினைச் செய்வதற்கு சிலரால் தடைகள் ஏற்பட்டிருந்தன. அவைகள் உரியவர்களோடும் எமது வர்த்தகர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களும் தமது கடமையைத் திறம்பட செய்திருந்தனர்.
மாவீரர் நினைவாக ஏனைய தமிழர்கள் வாழும் நாடுகளில் வர்த்தக நிலையங்கள், வர்த்தக சங்கங்கள் போன்றவற்றின் அனுசரணையுடன் எழுச்சிக்கோலம் கொண்ட போதும் பாரிசிலும் உணர்வும் தேசப்பற்றும் கொண்ட வர்த்தகர்கள் தாமும் தமது உணர்வுகளை வெளிக்காட்ட மஞ்சள், சிவப்புக் கொடிகளை தமது நிறுவனங்களில் கட்டமுற்பட்டபோது சிலரால் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. அதனைப் பேசி, புரிந்துணவுடன் ஒரு நிலைப்பாட்டிற்குச் செல்வதற்கு முன் ஒரு சிலர் இதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, சட்டத்தை கையில் எடுத்து, முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களையும் வர்த்தகர்கள் மீது பாவித்து மேற்கொண்டிருந்த செயற்பாடானது விரும்பத்தகாத பெயரினை எமக்குத் தோற்றுவித்திருக்கின்றது.
இவர்களின் இவ்வாறான செயற்பாட்டிற்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினராகிய எமக்கும் எமது ஏனைய கட்டமைப்புகளுக்கும் எந்தவிதமான தொடர்போ தூண்டுதலோ கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, அதற்கான அவசியமும் எமக்கு தேவையற்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கின் றோ ம். எழுச்சியான நேரங்களில் எழுச்சியாகவும், துயரம் தந்த நாட்களில் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயும், மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் உணர்வுள்ள தேசவிடுதலைப் பற்றுக்கொண்ட வர்த்தகர்களின் விருப் பத்திற்கு அமையவே இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தடவை மே 18 இலும் அவற்றைச் செய்வதற்கு சிலதடைகள் சிலரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் தொடர்ச்சியாகவும் தான் மாவீரர் எழுச்சிக் கோலம் தடைப்பட்டமை அனைவராலும் பார்க்கப்படுகின்றது.
ஆனாலும் நடைபெற்று முடிந்த மாவீரர் நாளில் வழமையை விட பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டு உயிரது ஈந்தோர் உணர்வில் கலந்தே எமது மக்கள் உள்ளொளியைப் பெருக்கினர். ஈழ உரிமைப் போரின் சக்தியில் யாவரும் ஒன்றாய் கலந்திட்டனர். இதற்குச் சோடனையோ, அலங்காரமோ தேவையில்லை அவை அகவுணர்வு கொண்டு ஒவ்வொரு இனமானத்தமிழர்களினால் உள்ளார்ந்து செய்யப்பட வேண்டும். அதற்கான மாற்றம் ஈழத் தமிழர்களின் வர்த்தக இதயமான லாச்சப்பல் பகுதியில் ஏற்படும். அதுவரை, எங்கள் கண்கள் கண்ணீர் கோலம் வீரரே! எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே ! என்ற வரிகளுக்கமைய எம் மாவீரர்களிலும், மக்கள் மீதும் நம்பிக்கை கொண்டு அவர்கள் கால்தடம் பற்றித் தொடர்ந்தும் பயணிப்போம்.
நன்றி.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு