சிலாபம் – முந்தல் பிரதேசத்தில் ஆடுகளை திருடி அவற்றை கறுப்பு கண்ணாடியுடன் கூடிய ஆடம்பர ஹைபிரைட் கார்களில் கொழும்புக்கு கடத்திச் சென்று விற்பனை செய்யும் கடத்தல் வர்த்தகம் ஒன்றை சிலாபம் பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
சிலாபம் – புத்தளம் வீதியில் ராஜகந்தஹெவ பிரதேசத்தில் இன்று நடந்த வாகன விபத்தை அடுத்து இந்த கடத்தல் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
ஆடம்பர ஹைபிரைட் கார் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அவர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
விபத்தின் பின்னர், அதில் இருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். காரில் ஆடு ஒன்று இருந்துள்ளது. மேலும் சில ஆடுகள் அதில் இருந்தமைக்கான அடையாளங்கள் காரில் காணப்பட்டன.
ஹைபிரைட் கார் கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசித்து வரும் பெண்ணொருவருக்கு சொந்தமானது என்பதுடன் அவர் கார்களை வாடகைக்கு வழங்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கார்களை வாடகைக்கு பெற்றுக்கொள்ளும் நபர்கள் அதனை கொண்டு சென்று புத்தளத்தில் திருடும் ஆடுகளை கொழும்புக்கு கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.