மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை, வெள்ளத்தினால் சுமார் 15019 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 64 குடும்பங்கள் இடைத்தங்கல் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரென மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் குறித்து ஆராயும் கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கும் கிரமமான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
வழங்கப்படவிருக்கின்ற நிவாரண உலர் உணவுப் பொருட்கள் தரமானதாகவும் சிறந்ததாகவும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் பணிப்புரை விடுத்தார்.
மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 12 இடைத்தங்கல் முகாம்களில் தற்போதுவரை 64 குடும்பங்களைச் சேர்ந்த 1915 பேர் தங்கியுள்ளனர்.
அதேவேளை மாவட்டத்தின் 12 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து 15019 குடும்பங்களைச் சேர்ந்த 51433 பேர் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் தகவல் வெளியிட்டார்.