அடிப்படைவாதிகளும், பிரிவினைவாதிகளும் ஐக்கிய தேசியக் கட்சியை சூழ இருக்கும்வரை, அந்தக் கட்சியால் வெற்றிப் பாதையை நோக்கி ஒருபோதும் பயணிக்கவே முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “சஜித் பிரேமதாஸ, மிகவும் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர்தான் இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு கஷ்டப்பட்டு பெற்றுக் கொண்ட இந்த பதவியில் அவர் தொடர வேண்டும் என நாம் இவ்வேளையில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று தலைமைத்துவப் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. இந்தப் பதவியையும் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என அந்தக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் அனைவரும் கோரி வருகிறார்கள்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதில் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தால் இந்த நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களா எனும் கேள்வியும் எழுகிறது.
ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் களமிறங்குவதைவிட சஜித் களமிறங்கினால் வெற்றி உறுதி என்றுதான் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக அவர்கள் களமிறக்கினார்கள்.
பாரிய போராட்டத்தின் மத்தியிலிலேயே அவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். ஆனால், பிரதிபலன் எவ்வாறு அமைந்தது? ரணில் விக்கிரமசிங்கவை விட பாரியளவிலான தோல்வியையே அவர் பெற்றுக்கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள விரோத தன்மை, சர்வதேசத்திற்கு அமைவாக செயற்படும் தன்மையை மாற்றிக் கொள்ளாவிட்டால் மற்றும் அடிப்படைவாதியான ரிஷாட் பதியுதீன், பிரிவினைவாதி எம்.ஏ.சுமந்திரன், பொய்களைக் கூறும் சம்பிக்க ரணவக்க. ராஜித சேனாரட்ன, மற்றும் சர்வதேச சக்திகளின் அடிவருடியான மங்கள சமரவீர போன்றவர்களை சூழ வைத்துக் கொண்டால், இதே பெறுபேறு தான் சஜித் பிரேமதாஸவின் தலைமையின் கீழும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கும்.
இதுதொடர்பில் எவ்வித சந்தேகமும் இல்லை” – என்றார்.