அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் இந்தியாவின் அனுபவத்தை நேபாளம் பார்க்க முடியும்: பிரணாப்

284 0

அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் இந்தியாவின் அனுபவத்தை நேபாளம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.இந்தியாவுக்கும் அண்டைநாடான நேபாளத்துக்கும் இடையே சமீபகாலமாக விரிசல்கள் இருந்து வரும் நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று நேபாள தலைநகரான காத்மாண்டு சென்றடைந்தார்.

கடந்த 18 ‌ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஜனாதிபதி தற்போது முதல்முறையாக நேபாளம் செல்வதால் பிரணாப் முகர்ஜியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நேபாளம் சென்ற பிரணாப் முகர்ஜிக்கு அந்நாட்டு ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி தலைமையில் சிகப்பு கம்பளம் விரித்து, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் நேபாள ஜனாதிபதி அலுவலகத்தில் பித்யா தேவியுடன் பிரணாப் முகர்ஜி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் இந்தியாவின் அனுபவத்தை நேபாளம் கணக்கில் கொள்ளலாம் பிரணாப் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தகாலை பிரணாப் சந்தித்தார். அப்போது, இந்தியா-நேபாளம் உறவை மேம்படுத்த தங்கள் நாடு எந்த முயற்சியும் மேற்கொள்ளாது என்று பிரணாப் முகர்ஜியிடம் புஷ்ப கமல் தெரிவித்தார்.

மேலும், “நேபாள அரசியலமைப்பு சட்டம் செயல்படுத்தப்படுவதற்கான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சில சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தீர்வு என்பது ராஷ்டிரிய சமாசார் சமிதியை பொறுத்து தான்” என்று கூறினார்.

இந்த சந்திப்பின் போது நேபாள வெளியுறவுத் துறை மந்திரி பிரகாஷ் ஷரன் மகத் உடன் இருந்தார். சந்திப்பின் போது இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை செய்யபப்ட்டதாக அவர் தெரிவித்தார்.