தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பொதுப்பார்வையாளர்கள் கண்காணிப்பு: ராஜேஷ்

395 0

201611030801083805_rajesh-lakhoni-information-3-constituencies-general-visitors_secvpfதேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பொதுப்பார்வையாளர்கள் இன்று முதல் கண்காணிப்புப்பணியை தொடங்குகின்றனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

இதுகுறித்து நிருபர்களுக்கு, ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டது. அரவக்குறிச்சியில் 59 வேட்புமனுக்களும், தஞ்சாவூரில் 36 வேட்புமனுக்களும், திருப்பரங்குன்றத்தில் 44 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று (3-ந்தேதி) நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப்பெற வரும் 5-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

3 தொகுதிகளுக்கும் பொதுப்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கேரளாவைச் சேர்ந்த யு.வி.ஜோஸ், அரவக்குறிச்சிக்கு உத்தரகாண்டைச் சேர்ந்த பூபால் சிங் மன்டல், தஞ்சாவூருக்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சாதிக் அகமது ஆகியோர் பொதுப்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்புமனு பரிசீலனை முதல் ஓட்டு எண்ணிக்கை வரை அனைத்து தேர்தல் பணிகளையும் இவர்கள் கண்காணிப்பார்கள்.

இந்த பார்வையாளர்கள் அனைவரும் 3-ந் தேதியில் இருந்து (இன்று முதல்) பணிகளைத் தொடங்குவார்கள். வேட்புமனுக்கள் பரிசீலனை அவர்கள் முன்னிலையில்தான் நடக்கும். தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 9-ந் தேதியன்று துணை ராணுவப் படையினர் வருகிறார்கள். வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிப்பதற்காக வருமான வரித்துறையில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பொதுத்தேர்தலில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பல்வேறு தகவல் தொழில்நுட்ப முறைகள் பின்பற்றப்பட்டன. தொலைபேசி, எஸ்.எம்.எஸ்., செல்போன் செயலிகள் ஆகியவை மூலம் புகார் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த நவீன முறைகளை இந்திய தேர்தல் கமிஷன் கேட்டு வாங்கியுள்ளது.

அவற்றை உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் நடக்கவுள்ள தேர்தல்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.