துன்னாலையில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் மற்றும் வாள் வெட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை மீளவும் வெட்டுவதற்கு வாள்களுடன் வைத்தியசாலையில் புகுந்தவர்களால் பெரும் பதற்றம் நிலவியிருந்தது.
துன்னாலை கிழக்குப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்காகி அண்ணன், தம்பி உட்பட மூவர் படுகாயமடைந்தனர்.
இதில் அதேயிடத்தினைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை கமலேஸ்வரன் (வயது33), கிருஷ்ணபிள்ளை ரவிதீபன் (வயது21), அரசன் அஜந்தன் (வயது35) ஆகிய மூவர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசா லையில் முற்பகல் 9.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை வெட்டுவதற்காக வாள்கள், கொன்டன்களுடன் மூவர் கொண்ட குழு ஒன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் புகுந்து கொண்டது. இதனால் நோயாளர்கள் பெரும் பீதிக்குள்ளாகினர்.
அச்சமயம் வைத்தியசாலைப் பொலிஸார் ஒருவர் படுகாயமடைந்தவர்களிடம் முறைப்பாட்டை பதிவு செய்து கொண்டிருந்தார்.அதனை அவதானித்த வாள்களுடன் புகுந்த குழு வைத்தியசாலைக்கு வெளியே வந்து காத்து நின்றுள்ளது.
இதனையடுத்து அங்கிருந்த நூற்றுக்கணக்கான நோயாளர்களின் பாதுகாப்புக் கருதி வைத்தியசாலையின் வாயிற்கதவு மூடப்பட்டது. உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்ப்பட்ட நிலையில் பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பொலிஸார் விரைவாக சம்பவ இடத்துக்கு வந்ததையடுத்து கதவு திறக்கப்பட்டது.